பேரணாம்பட்டு பேருந்து நிலைய விரிவாக்கத்தில் 9 கடைகளா? – கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருதரப்பினர் கடும் வாக்குவாதம்

பேரணாம்பட்டு பேருந்து நிலைய விரிவாக்கத்தில் 9 கடைகளா? – கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருதரப்பினர் கடும் வாக்குவாதம்

செய்தி: கு.அசோக்,

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகரில் நீண்டகாலமாக பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வரும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் நகராட்சி சார்பில் 9 கடைகள் கட்டப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடைகள் வேண்டும், வேண்டாம் என இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பேரணாம்பட்டு பகுதியில் போதிய வசதிகள் இல்லாத சிறிய அளவிலான பேருந்து நிலையம் மட்டுமே இருந்து வந்ததால், அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.1 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரிவாக்கப் பணிக்காக பேருந்து நிலையம் அருகே இருந்த காவல் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, பழைய பேருந்து நிலைய கட்டிடம் மற்றும் காவல் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 கடைகள் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் பேருந்து நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதுதொடர்பாக குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் அமைப்பு ஒன்றை உருவாக்கி, மாவட்ட நிர்வாகத்திடம் ஆட்சேபனை மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியாத்தம் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேருந்து நிலைய பகுதியில் கடைகள் கட்டப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும், கடைகள் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தனர். கூட்டத்தின் முடிவில், அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகளை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் உரிய முடிவு மாவட்ட ஆட்சியரால் எடுக்கப்படும் என குடியாத்தம் கோட்டாட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.