நான்கு அமைச்சர்களுக்கு கல்தா? உதயநிதி உட்பட இளைஞர்களுக்கு வாய்ப்பு!
ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் தி.மு.க.அரசு பதவி ஏற்று ஓராண்டை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இது மொத்த எம்.எல்.ஏ.க்களின் 15 சதவீதம் ஆகும். இந்நிலையில் பல அமைச்சர்கள் மாற்றப்படவுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் உட்பட நான்கு இளையவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டின்படி ஏற்படுத்தப்பட்ட தனி கண்காணிப்பு பிரிவின் அறிக்கை அடிப்படையிலேயே மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார்களா?தங்கள் துறை பணிகளை நிலுவையில் வைத்துள்ளார்களா? எதனால் அந்த பணிகள் நிலுவையில் உள்ளன?என்பது உள்ளிட்ட பல அம்சங்களை மேற்கண்ட கண்காணிப்புக்குழு தான் ஆராய்ந்து குறிப்பு கொடுத்து வருகிறதாம்.
சமீபத்தில் ஓராண்டு பூர்த்தியானபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அமைச்சர்களை அழைத்து நேரில் பாராட்டினார். ஒதுக்கப்பட்ட துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றியதாக கூறி அந்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக மூட்டினார். தொடர்ந்து பணிகளை திறம்பட செய்யுமாறு அறிவுறுத்தினார்.
அதே போல் சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று லேசான அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாமே என்று அந்த அமைச்சர்கள் மீது அவர் கருத்து தெரிவித்ததாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதில் 4 அமைச்சர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிருப்தி உள்ளதாம்.
ஆகவே தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் மாற்றி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், மக்கள் மத்தியில் அனைத்து துறைகளிலும் வரவேற்பை பெற முடிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே இதுபற்றி பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மேற்கொண்டுள்ள ஊட்டி பயணம் முடிந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற நாட்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமாம்.
அமைச்சரவை மாற்றத்தின் போது அதிருப்தி பட்டியலில் இருக்கும் 4 அமைச்சர்கள் மந்திரி சபையில் இருந்து நீக்கப்படலாம் என்று உறுதி செய்பப்படாத தகவல்கள் உலா வருகின்றன. அப்படி 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு பதில் 4 புதியவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த சூழ்நிலையில் அந்த 4 பேரும் இளைஞர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே தி.மு.க. இளைஞரணி தலைவரும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக மூத்த அமைச்சர்களில் பலரும் தி.மு.க. மூத்த தலைவர்களில் பலரும் உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தி.மு.க. நிர்வாகிகள் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரைப் போலவே வடமாவட்டத்தை மையப்படுத்தியும் ஒரு இளைஞருக்கு வாய்ப்பு வரப்போகுதாம்.
அப்படின்னா அந்த சீனியர்?

admin
