7 ஆண்டுகளாகியும் திருப்பத்தூருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை! 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – அரசுக்கு பொதுமக்கள் கேள்வி!

7 ஆண்டுகளாகியும் திருப்பத்தூருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை! 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – அரசுக்கு பொதுமக்கள் கேள்வி!

செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்தும் இதுவரை பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் நகரில் சிவராஜ் லாட்ஜ் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியாக பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

மாவட்டம் உருவாகி ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பாஸ்போர்ட் அலுவலகம் மட்டும் இதுவரை அமைக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் மற்றும் பொதுமக்கள் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காக வேறு மாவட்டங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தேவையற்ற பயணச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசுத் தரப்பிலும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் திருப்பத்தூர் நகரிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தினர்.

மாவட்டமாக உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்தும் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படாதது திருப்பத்தூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மாவட்ட மக்களின் சிரமங்களை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.