காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதா?!

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதா?!

ம.பா.கெஜராஜ்,

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதாக எழுந்த தகவலால் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

  இதை தொடர்ந்து, புதிய வேட்பாளர் பட்டியல் மீண்டும் இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம்  டெல்லியில் நடக்கிறது. தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் படுவேகமாக அறிவித்து வருகின்றனர்.

 திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. திமுக வேட்பாளர்கள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவை தொடர்ந்து தேமுதிக, மதிமுக, கொமதேக, மமக, ஐயூஎம்எல், மஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

   இன்னும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

   திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய 28 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

   இந்த முறை அதிமுகவை நேரடியாக 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எதிர்த்து களமிறங்குகிறது.

   இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியை டெல்லி மேலிடம் வேகப்படுத்தி வருகிறது.

  இதற்கிடையே, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒரு பெரும் படையே டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

 தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் வாய்ப்பு கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக டெல்லி சென்றுள்ளனர்.