கழகத்தில் இருந்து கழன்று கொண்ட ஒ.செ.! ஆதிக்க சக்தி யார்? உ.பி.க்கள் குழப்பம்!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் கிழக்கு ஒன்றியத்தின் திமுக செயலாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ். அவர் தன்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பினால் உபிக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர் இன்று அறிவாலயத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்ததாக சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
அதில் சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றியச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
அவர் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
மதிப்புமிகு.அய்யா அவர்களுக்குஎன் பணிவான வணக்கம்.
நான் கடந்த பத்து ஆண்டுகளாக மாதனூர் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வருகின்றேன். இதுநாள்வரை தலைமைக் கழகத்திற்கும், மாவட்ட கழகத்திற்கும், கழக தோழர்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு வந்துள்ளேன்.
75-ஆண்டு காலம் எனது தந்தையார் ப.சண்முகம், எம்.பி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கழக செயலாளர் காலம் முதல் நான் கிளை கழக செயலாளர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழகச் செயலாளர், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் கழகத்திற்கும், சமூகத்திற்கும் எவ்வித ஊறு விளைவித்திடாமல் மக்களிடையேயும், கழகத்தினரிடமும் அறம் சார்ந்தே செயல்பட்டுள்ளோம்.
சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பினை தொடர முடியாத காரணங்களினால் அப்பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுநாள்வரை என்னுடன் உழைத்திட்ட கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து விடைபெறுகின்றேன். மேலும் எனக்கு பல்வேறு பொறுப்புகளை அளித்திட்ட தலைமை கழகத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
சுரேஷ் குறிப்பிடுகிற ஆதிக்க சக்தி யார் என்பதை அறிய சுரேஷை தொடர்பு கொண்டோம் அவர் போன் எடுக்கவில்லை

admin
