பஞ்சமி நிலம் தொடர்பான பத்திர பதிவு செய்ய கூடாது! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை!
அ.கார்த்தீஸ்வரன்,
பஞ்சமி நிலம் தொடர்பான பத்திர பதிவுகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
தமிழக தேவேந்திரர் இளைஞர் பேரவை பொதுச்செயலர் கணபதி குடும்பனார் தாக்கல் செய்த பொதுநல மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மனுதாரர் கேட்டுக் கொண்டிருப்பதாவது,
பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த விவசாயம் செய்ய நிலம் வழங்கும் சட் டம், பிரிட்டிஷ் ஆட்சியில், 1892ல் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அப்பிரிவு மக் களுக்கு தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந் தளிக்கப்பட்டது. அது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. நிலத்தை, 10 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது.
அதன் பின் பட்டியல் இனத்தவரிடம் மட்டுமே விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியும். இந்த நிபந்தனைகளை மீறினால் ரத்து செய்யப்படும் என, அப்போது பிரிட்டிஷ் அரசு நிபந்தனை விதித்தது.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினரை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண் டாலும், அவர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பல உரிமைகள் மறுக்கப் படுகின்றன.
பட்டியலினம், பழங்குடியினர் அல்லாத இதர சமூகத்தினரின் பெயர்களில் பஞ்சமி நிலம் தற்போது சட்டவிரோதமாக, மோசடியாக விற்கப்படுகிறது. இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
மாநிலத்தில் பஞ்சமி நிலத்தை அடையாளம் கண்டு, மீண்டும் உண்மையான பயனாளிகள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்க, 2015ல் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது.
மேல் நடவடிக்கை இல்லை.
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, பட்டியலினத்தவர்களிடம் ஒப்படைக்க மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் சட்டம் உள்ளது.
தமிழகம் சமூக நீதியில் முன்னோடி மாநிலமாக இருந்தும், பஞ்சமி நிலத்தை பாதுகாக்க சட்டம் இயற்ற வில்லை. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், பழநி தாலுகாவிற்குட்பட்ட சில இடங்களில் பட்டியலினத்தவர் அல்லாத இதர சமூ கத்தினர் பெயர்களில் பஞ்சமி நிலம் சட்டவிரோதமாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வருவாய், பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுதும் இதர சமூகத்தினர் பெயர்களில் பஞ்சமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.ஆக்கிரமிப்பிலுள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு, உரிய பயனாளிக்கு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே என் மனுய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கணபதி குடும்பனார் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பஞ்சமி நிலம் தொடர்பான பதிவுகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. தமிழக வணி கவரி மற்றும் பதிவுத்துறை செயலர், வருவாய்த்துறை செயலர், ஆதிதிராவிடர் நலத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி நான்கு வாரம் ஒத்தி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

admin
