மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு...பீதியில் ஆம்பூர் மக்கள்!

 மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு...பீதியில் ஆம்பூர் மக்கள்!

ஜி.குலசேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அடிக்கடி கிரைம் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் ஆம்பூரில் வீதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியோடினர்.

   வயதானவர்கள் என்றும் பாராமல் நகையை பறித்து கீழே தள்ளி விழுந்ததில் கழுத்து மற்றும் கை கால்களில் காயம் ஏற்பட்டதாக மூதாட்டி கண்ணீர் மல்க பேட்டி.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவகி(66). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்து ஜெயலட்சுமி என்ற இளைய மகள் சென்னையிலும் கவிதா என்ற மூத்த மகள் பெரியாங்குப்பம் பகுதியிலும்  வசிக்கின்றனர்.

  இந்நிலையில் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.  ஆம்பூர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

   அப்படியிருக்க, நேற்று சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய போது இரவு 10 மணி ஆனதால் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி உமர் ரோடு, கிருஷ்ணாபுரம் வழியாக எண்ணெய்கடை பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரது வீட்டில் தங்குவதற்காக நடந்து சென்றார்.

 அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் மூதாட்டியை பின் தொடர்ந்து வந்து எண்ணை கடை பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு கீழே தள்ளிவிட்டு தப்பினர்.

 இதனை கண்ட அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் நிலை குலைந்து கீழே விழுந்திருந்த மூதாட்டியை மீட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 மூதாட்டி தேவகி அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.