எதிர்கட்சி எம்பிக்களின் வாக்குகளுடன் அபார வெற்றிப் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

எதிர்கட்சி எம்பிக்களின் வாக்குகளுடன் அபார வெற்றிப் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

ம.பா.கெஜராஜ்,

 இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார். அவருக்கு எதிரிகட்சி எம்பிகளின் வாக்குகளும் விழுந்ததால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

   குடியரசு துணைத் தலைவர் தவிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ம் தேதி நிறைவு பெற்றது. ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர் களமிறங்கினர்.

   மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஓர் உறுப்பினர் இடம் காலியாக உள்ளது.

   அதேபோல, தற்போது 233 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர, 12 நியமன எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி அரங்குக்கு வந்து, தனது வாக்கைச் செலுத்தினார்.

   முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) எம்.பி.யுமான எச்.டி.தேவகவுடா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோரும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா தொகுதியின் சுயேச்சை எம்.பி.யான ரஷீத், பரோலில் வந்து வாக்களித்தார்.

   வாக்கு எண்ணிக்கை...மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தின் எஃப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 782 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவாகியிருந்தன.

   வாக்கு எண்ணிக்கை சுமார் 7.30 மணியளவில் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது. எண்ணிக்கையின் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் 300 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

   இதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றியைப் பெற்று, நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

   மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டின் தற்போதைய பலத்தின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மூலம் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

   ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11 எம்.பி.க்கள்) ஆதரவுடன் அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். இது தவிர சுயேச்சைகள் மற்றும் பிற நடுநிலை எம்.பி.க்களின் வாக்குகளைக் கணக்கிட்டால் அவருக்கு 449 வாக்குகள் கிடைதிருக்க வேண்டும்.

  அதே போல் இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளைப் பெற்றார். சுதர்சன் ரெட்டி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்.

   அப்படியென்றால் இந்தியா கூட்டணியில் உள்ள சில எம்பிக்கள் மாற்றி வாக்களித்திருக்கிறார்கள்.