பாஜக 27, பாமக 18, அமமுக 11 - அதிமுக கூட்டணியில் 'சுமுக' தொகுதிப் பங்கீடு?!
ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய கட்சிகள் 'தொகுதி ஒதுக்கீட்டை' இறுதி செய்து எதிரணியை திணறடித்திருக்கிறார்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.
திமுக ஏற்கெனவே இருந்த தனது கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை கூடுதலாக இணைத்துள்ளது. இதுமட்டுமின்றி அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றோரையும் திமுகவில் சேர்த்துள்ளது. அதே வேகத்தில், கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு கட்சியாக தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்து வருகிறது.
இந்தச் சூழலில், அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகவும், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்க டெல்லி தலைமை அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் பரவின.
மேலும், பாமக, அமமுக, தமாகா போன்ற கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்டு நெருக்குவதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று பாஜக, பாமக, அமமுக எனும் மூன்று முக்கிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளார் இபிஎஸ்.
அதிமுக அணியில் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெறும் கட்சிகள் இவை மூன்றும்தான். மற்ற கட்சிகளுக்கு எல்லாம் ஒற்றை இலக்க தொகுதிகள்தான் என்பதால் அவை குறித்த அறிவிப்புகள் அடுத்தகட்டத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணி முந்தைய தொகுதிப் பங்கீடு!கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் பாஜக 2.62 சதவீத வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பாஜகவின் வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்றது.
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைத்து கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் ஐஜேகே, தமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் பாஜக சின்னத்தில் போட்டியிட்டது சுட்டிக்காட்டக்டியது ஆகும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்த்ததாக சொல்லப்பட்டது. பின்னர் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என 39 தொகுதிகளாவது வேண்டுமென உறுதி காட்டியது. இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இப்போது 27 தொகுதிகள் இறுதியாகியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த பாமக, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 3.80 சதவீத வாக்குகளுடன் 5 தொகுதிகளை வென்றது. 2024 தேர்தலில் பாஜக அணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4.33 சதவீத வாக்குகளைப் பெற்றது.
அதன்பின்னர் பாமகவில் பிளவு ஏற்பட்டு, அதிகாரபூர்வ பாமக அன்புமணி பக்கம் உள்ளது. ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில் அன்புமணியின் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள்து. ஏற்கெனவே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்த டிடிவி தினகரனின் அமமுக, 2021 தேர்தலில் தனி அணியாக 165 தொகுதிகளில் போட்டியிட்டு 2.35 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பின்னர் அமமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 1 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தச் சூழலில் அமமுகவுக்கு தற்போது 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
அதற்கான பேச்சுவார்த்தைகளும் வேகமாக நடந்து வருவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாகவும், டெல்லி தலைமை இபிஎஸ்சை நெருக்குவதாகவும் பேசப்பட்ட நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு பாஜக, பாமக, அமமுக தலைவர்கள் வந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளனர்.
இதன் மூலமாக அதிமுக அலுவலகத்துக்கு பாஜக தலைவர்கள் வருவதில்லை என்ற விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 தொகுதிகளில், மற்ற கட்சிகளுக்கு 10 முதல் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
2021-ல் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கிட்டத்திட்ட நிறைவடைந்த நிலையில், அதிமுகவும் முக்கிய கட்சிகளுடனான ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
அதிமுக கூட்டணியின் சுமூக தீர்வானது அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றப்போகிறார்கள் என்பதை வெளிக்காட்டியிருக்கிறது.

admin
