கோவில் பயன்பாட்டு இடத்தில் அரசு கட்டிடம் கட்ட முயற்சி!நீதிமன்றத்தில் ஆதாரங்களை மறைத்த அதிகாரிகள்! களம் இறங்கும் இந்து முன்னணி!

கோவில் பயன்பாட்டு இடத்தில் அரசு கட்டிடம் கட்ட முயற்சி!நீதிமன்றத்தில் ஆதாரங்களை மறைத்த அதிகாரிகள்! களம் இறங்கும் இந்து முன்னணி!

ம.பா.கெஜராஜ்,    

 கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபாடு செய்துவரும் கோவில் மற்றும் அதன் பயன்பாட்டுக்காக உள்ள இடத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கிராம மக்களின் உணர்வுகளை புறம்தள்ளும் செயல் குறித்து தங்கள் பார்வைக்கு புகார் தெரிவிப்பதுடன், கிராம வரைபடத்தில் உள்ள கோவிலை, இல்லை என்று நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த அலுவர் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுத்து மக்களின் வழிபாட்டு உரிமையை காக்கும்படி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு அளித்திருக்கிறார்கள்.

 மனுவில் தெரிவித்திருப்பதாவது,

 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அக்ராவரம், காளிக்குப்பம், குட்டப்பள்ளி ஆகிய மூன்று  கிராமங்களில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்நிலையில் மூன்று கிராமத்தினர் வணங்கும் ஸ்ரீ காளியம்மன் கோயில் கிராம நத்தம் சர்வே எண்.21-ல் உள்ளது.  இந்த கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும்.

 இவ்விடத்தில் பிரதிமாதம் அமாவாசையன்று அம்மனுக்கு திருபூஜைகள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 வருடா வருடம் இந்த கோவிலில் திருவிழா நடைபெறும். இதில் பங்கு பெற்று வழிபட எங்கள் கிராமங்களைச் சேர்ந்த வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் இராணுவ வீரர்கள் வந்து பங்கேற்று வழிபாடு செய்வார்கள். மேலும், அண்டை கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 பக்தர்கள்  கலந்துக் கொள்கிறார்கள்.

  கோவில் மற்றும் அதன் வெகு அருகில் உள்ள சிறிய இடத்தில் கிராம வாசிகளால் அம்மனுக்கு மகளீர் பொங்கலிட்டு வழிபடுதல், அன்னதானம் வழங்குதல், வானவேடிக்கை. ஒலி.ஒளி அமைத்தல் என திருப்பணிகள் ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடைபெற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

   இந்நிலையில் கோவிலின் பயன்பாட்டில் உள்ள இடத்தில் ஒரு புதிய கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு கிராமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம், மேற்படி இடத்தில் கோவில் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணத்துடன் புகார் மனு அளிக்கப்பட்டது.

  அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கிராம மக்கள் சார்பில் நீதிமன்றத்தை நாடவேன்டிய சூழலை ஏற்படுத்தினர். அப்போது கோவில் இருப்பதை கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மூடி மறைத்துவிட்டனர்.

  கோவிலுக்கும், அதன்பயன்பாட்டில் உள்ள இடத்தையும் அபகரித்து மத உணர்வையும், வழிபாட்டையும் தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இத்தனைக்கும் புதியதாக கட்டிடம் கட்ட முயலும் இடத்துக்கு பக்கத்திலேயே கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நல்ல ஸ்திரமான வகையில் பயன்பாட்டில் உள்ளது. அப்படியே புதிய கட்டிடம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கிராமத்தில் பல்வேறு இடத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.    

   ஆகவே அம்மா அவர்கள் விசாரித்து நூறு ஆண்டுகளுக்கு மேல் கிராமக்களின் வழிபாட்டுக்காக உள்ள் மேற்படி கோவில் மற்றும் அதன் பயன்பாட்டுக்கு உள்ள இடத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதபடிக்கு நடவடிக்கை எடுத்து கட்டுமான பணிக்கான இடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டது.

 இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மகேஷிடம் பேசினோம்,

 கிராமங்களில் ஆண்டாண்டு காலமாக கோவில் மற்றும் கோவில் பயன்பாட்டுக்கு உள்ள நிலங்கள் பலவற்றுக்கு பட்டா கிடையாது.  அதை காரணம் காட்டி அந்த இடங்களில் அரசு கட்டிடங்கள் கட்ட முயற்சிப்பது வழிபாடை திட்டமிட்டு தடுக்கும் செயலாகும்.

 சட்ட ரீதியாக அனுகி இதை தடுக்க முயன்றால் கிராம நிர்வாக அதிகாரிகள் முதற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகள் வரை கூட்டு சேர்ந்துக் கொண்டு ஆளும் கட்சியினருக்கு துணைப்போகும் விதமாக நீதிமன்றத்தில் பொய்த் தகவலை கொடுத்து இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறார்கள்.

 தற்போது அவர்கள் மேற்கொள்ள முயன்ற கட்டிடம் அந்த இடத்தில் அவசியம் இல்லாதது ஆகும்.

 ஆகவே ஆட்சியர் அவர்கள் மேற்படி கிராமத்தினர் அளித்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த கட்டிடம் கட்டுவதை கைவிட அறிவுறுத்தி, ஆர்பாட்டம் போராட்டம் ஆகியவற்றை தவிர்க்குமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார்.

  தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் இந்த அடாவடிச்செயலை கைவிட்டால் நலம் என்பதே பலரின் கருத்து.