பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! அதிமுக மா.செ. கூட்டத்தில் அதிரடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! அதிமுக மா.செ. கூட்டத்தில் அதிரடி!

 ம.பா.கெஜராஜ்,

  அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும், அண்ணாமலையை கண்டித்து பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் சில அ.தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.

 அப்போது, சமீப காலமாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல் குறித்து காரசாரமாக பேசப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது, அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

 இனியும் பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் வலியுறுத்தினர். இதைடுத்து அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது.

 சாராயம் விற்பவர்கள், கற்பழிப்பு, அண்ணாமலை பதவி.

இந்நிலையில், அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை எந்த அரசியல்கட்சித் தலைவர்கள் மீதும் இல்லாத அளவுக்கு அவரது கட்சி நிர்வாகிகளே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிவருகிறார்கள். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கற்பழிப்பு, ஏமாற்றி பணம் மோசடி செய்தவர்களுக்கு எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு பதவி கொடுக்கும் அண்ணாமலை எங்களது ஆளுமை மிக்க புரட்சித் தலைவியை பற்றி விமர்சிக்கிறார்.

  இதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர். இதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

   அப்போது இவர் கட்சியில் இல்லை. இன்றைக்கு ஊழலை பற்றி பேசுகிறார். உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆட்சி எது என்றால் இவர் கர்நாடகாவுக்கு பிரசாரம் செய்ய சென்றாரே அங்கு தான். தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ந்து விட்டது என்கிறார்.

   அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி தொடரும். இது பிரதமரின் விருப்பம் என்று டெல்லியில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அமித்ஷா கூறியிருந்தார். உங்களுக்கு வீரம் இருந்திருந்தால் அன்றைக்கு அமித்ஷாவும், நட்டாவும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி தொடரும் என்று கூறியபோது நீங்கள் மவுனமாக இருந்தது ஏன்? அந்த இடத்திலேயே கூட்டணி வைக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறாதது ஏன்?

 இன்றைக்கு எதற்காக அண்ணாமலை பேசுகிறார் என்றால் தமிழக பாரதிய ஜனதா தி.மு.க.வோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 அண்ணாமலைக்கு பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தி.மு.க.வின் பி. 'டீம்' ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். அ.தி.மு.க. பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள். எங்களை ஏன் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.