ஆணையம் அமைத்த பின்னர் அதிகாரிகள் பேட்டி கொடுக்கலாமா என அதிமுக கேள்வி! நீதிமன்ற விசாரணை உள்ள போது செந்தில் பாலாஜி பதட்டப்படுவது ஏன் அண்ணாமலை!

ஆணையம் அமைத்த பின்னர் அதிகாரிகள் பேட்டி கொடுக்கலாமா என அதிமுக கேள்வி! நீதிமன்ற விசாரணை உள்ள போது செந்தில் பாலாஜி பதட்டப்படுவது ஏன் அண்ணாமலை!

ம.பா.கெஜராஜ்,

  விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள் வெளியிடலாமா என அதிமுக கேள்வி எழுப்பியிருக்கிறது. அதே போல்  நீதிமன்றத்தில் விசாரணை உள்ள போது  செந்தில் பாலாஜி பதட்டப்படுவது ஏன் என அண்ணாமலை அறிக்கை?!

  நீதிமன்றத்திலும் ஆணையத்திலும் விசாரணைஉள்ள போது  செந்தில் பாலாஜி பதட்டப்படுவது ஏன் என்று தமிழக பாஜக வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து.

  இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.

   இந்த நிலையில் ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார்.

  தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில்,விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.

  விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.

  மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

   கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன?கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

   யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.

   நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது" என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

  அதேபோல் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?' என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிமுக பதிவிட்டுள்ளது.

   அதன் விவரம்: 'கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர்.

  டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத் துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு வேறு.

   இவ்வளவு பதற்றப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க திமுக. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? 'அரசியல் செய்யாதீர்', 'அரசியல் செய்யாதீர்' என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே? உங்கள் பதற்றம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.

   ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.

   அப்புறம், அந்த பத்து ரூபாய்... இந்தா வர்றோம், அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

  எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.

ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன

  நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை. தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை 'வெளிப்படையாக பேசுகிறேன்' என்று சொல்லி நியாயப்படுத்த செந்தில் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?

  இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், 'பத்து ரூபாய்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலே, 'பாலாஜி' என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியுள்ளார்.

  அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, அலட்சியத்தை மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?

ஏற்கெனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" என்று சொல்லிதான் அமலாக்கத் துறை வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீர்களே.

  இப்போ திரும்ப அதே டோனில் பேசுறீர்களே. இந்த முறை சிபிஐ வந்தால்? அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டீஷன்ஸை ஃபாலோ பண்ணுவீங்களா?" என அதிமுக தெரிவித்துள்ளது.