5 போலீசார் சிறையில் அடைப்பு: குடும்பத்தினர் முற்றுகையால் காவல் நிலையத்தில் பரபரப்பு!

ஆர்.பாலஜோதி,
கோயில் காவலாளி அஜித் என்பவர் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த வழக்கில் 5 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக்கண்டித்து காவலர்கள் குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். அவர், அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்த போது, தனது காரை 'பார்க்கிங்' செய்ய சொல்லி, அஜித்குமாரிடம் சாவியை கொடுத்தார்.
அவருக்கு கார் ஓட்ட தெரியாததால், மற்றொருவர் உதவியுடன் காரை அஜித்குமார் 'பார்க்கிங்' செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்தார்.
சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, பையில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,200 காணவில்லை.
எனவே நிகிதா அளித்த புகாரின்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தபோது, போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜூன் 28-ம் தேதி நடந்துள்ளது.
பின்னர், அஜித்குமாரை தாக்கி கொலை செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் தேதி போராட்டம் நடத்தினர். போலீஸார், அதிகாரிகள் சமரசத்தை அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத், காவல்நிலையத்தில் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார்.
நேற்று, தனிப்படை போலீஸார் மடப்புரம் கோயில் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கியதாக கூறப்பட்டநிலையில், அந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் காரில் புறப்பட்ட அவரிடம், அங்கிருந்த பெண்கள் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டனர். அவர்களிடம் வெங்கடேஷ்பிரசாத் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், அஜித்குமாரிடம் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், ரத்தக் கசிவு இருந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு அஜித்குமார உயிரிழந்த வழக்கில், தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
அப்படியிருக்க காவலர்கள் கைதைக் கண்டித்து, இன்று காலை அவர்களது குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "அரசுக்காக வேலை பார்த்ததுக்கு தண்டனையா? எங்களையும் கைது செய்து செய்ய வேண்டும்" என்று கோஷமிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.