"தமிழ்நாடு டிஜிபி நியமனத்தில் பரபரக்கும் "பவர் பாலிடிக்ஸ்"!
ம.பா.கெஜராஜ்,
"தமிழ்நாடு டிஜிபி நியமனத்தில் பரபரக்கும் "பவர் பாலிடிக்ஸ்" என்கிற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அதனை லைவ் லுக் வாசகர்களுக்காக பிரசுரம் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு,
தமிழ் ஊடகம் - பருந்தார் தகவல்கள்
மழைவிட்ட இடைவெளியில் பறந்து வந்தமர்ந்தார் பருந்தார்.
என்ன கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுப்பு எடுத்துட்டீங்க என்றோம்.
நீ மட்டும் என்னவாம் என்று எதிர் கேள்வி போட்டு நம்மை மடக்கினார்.
நாங்க தமிழ் ஊடகம் பத்திரிகை, இணையம், காட்சி ஊடகம்னு பிசியாக இருக்கோம் அதான் என்று கூற.
சரி...அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு என்று கூறிவிட்டு கடகடவென தகவல்களைக் கொட்டத் தொடங்கினார் பருந்தார்.
தமிழ்நாட்டின் காவல் துறைக்கு இரண்டு ஆண்டு நிரந்தர இயக்குநர் அதாவது டிஜிபி இன்னமும் நியமிக்கப்படலை. இதுதான் இப்போ டெல்லில பரபரப்பா பேசப்படும் தகவல்.
அதான் வெங்கடராமன் இருக்காரே என்கிறோம்.
மங்குனி ...அவர் பொறுப்பு டிஜிபிதான்.
ஓ....
தமிழ்நாட்டின் காவல்துறை இயக்குநராக பதவி வகித்த சங்கர் ஜிவால் பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் முடிஞ்சுடுச்சு.
ஆமாம்...அதான் அவருக்கு ஒரு புதிய பதவியை உருவாக்கி அதுல அமர வச்சுருக்காங்களே.
ம்...இப்போ என்ன பிரச்சனைன்னா மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் நியமனம் தொடர்பா பிரகாஷ் சிங் எனும் முன்னாள் காவல் துறை இயக்குநர் தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவான வரையறைகளை வகுத்து இருக்கு.
சரி...
அதன்படி...ஒரு மாநில அரசு ஒரு டிஜிபியின் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே தமது மாநிலத்தில் பணியில் இருக்கும் டிஜிபியாக தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் இந்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு UPSC அனுப்ப வேண்டும்.
சரி....
அதில் மூன்று பேரைத் தேர்வு செய்து மாநில அரசுக்கு UPSC பரிந்துரைக்கும்.
ஓ...
அதில் ஒருவரை டிஜிபியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பணியில் அமர்த்த வேண்டும்.
ஓஹோ....
ஆனா....சங்கர் ஜிவால் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெரும்போதுதான் பட்டியலையே அனுப்பினாங்க தமிழ்நாடு அரசு.
அடடே ...அப்புறம்.
அப்படி அனுப்பிய பட்டியல்ல இப்போ பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமன் பெயரையும் சேர்த்து அனுப்பிட்டாங்க.
சரி...அவரும் டிஜிபியாகத் தகுதி வாய்ந்தவர்தானே...!?
ஆமாம் வாய்ந்தவர்தான்...ஆனா அதேவேளை, அசாதாரண சூழ்நிலை தவிர வேறு காலங்களில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப் படக்கூடாது.
ஓ....
அடுத்து....1991 ம் ஆண்டு ஐபிஎஸ் தரம் பெற்ற அதே போல 1992 ம் ஆண்டு, 1993 ம் ஆண்டுன்னு தர வரிசைப் பட்டியல்ல மூத்தவர்கள் இருக்கும்போது 1994 ம் ஆண்டு தரவரிசையில் உள்ள வெங்கட்ராமன் பெயர் சேர்க்கப்பட்டிருக்கு. இந்தப் பட்டியலை ஆய்வு செய்த UPSC... சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்திப் ராய் ரத்தோர்னு தகுதி வாய்ந்த மூன்று பேர் பட்டியலை தமிழ் நாடு அரசுக்குக் கொடுத்திருக்கு.
ஆக... தேர்வாணையம் அவங்களோட கடமையை சரியா செஞ்சுட்டாங்க.
சும்மா செய்யலை...உச்சநீதிமன்றம் உத்தரவு.
இது வேறயா....
ஆமாம்,
இப்போ என்ன பிரச்னைன்னா.... UPSC கொடுத்த அந்த மூன்று பேர் பட்டியலில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்களை நாங்க ஏத்துக்க மாட்டோம். அதுக்கு இதுதான் காரணம்னு ஒரு காரணப் பட்டியலை UPSC க்கு அனுப்பியிருக்கு தமிழ்நாடு அரசு. ஆனா....UPSC அதெல்லாம் முடியாது...நாங்க கொடுத்த பட்டியல்தான் இறுதியானதுன்னு சொல்லிவிட்டதாகத் தகவல்.
அட....திரில்லர் படம் போல இருக்கே. ஆகமொத்தம், அந்த மூன்று அதிகாரிகளில் ஒருவரைக் கூட நியமிக்க திமுக மேலிடம் விரும்பலை, அதானே மேட்டர். சரி....அப்படி அவங்க என்ன தப்பு பண்ணிட்டாங்க ?!
அதெல்லாம் தெரியலை...ஆனா ஒரு தகவல் மட்டும் ஜார்ஜ் கோட்டையில் சத்தமாகவே கசியுது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மேலிடத்திற்கு அனுசரணையாக இருக்கும் ஒரு ஏடிஜிபி தரத்தில் உள்ள அதிகாரிதான் இதன் பின்னணியில் முழுவதுமாகக் காய் நகர்த்துகிறாராம்.
காரணம், மேலிடத்தின் நெருக்கத்தில் இருந்து கொண்டு காவல்துறையையே "இயக்கும்" தமக்கு இந்த மூன்று அதிகாரிகளில் யார் வந்தாலும் இடையூறாக இருக்கும் என்று அவர் எண்ணுகிறாராம்.
அவர்கள் வந்தால் தமது "பவர்" போய்விட்டால் என்ன செய்வது என்று சிந்திக்கிறாராம். அதனால் தமக்கு நட்பாக இருக்கும் தற்போதய பொறுப்பு டிஜிபியையே நிரந்தர 2 ஆண்டு டிஜிபியாக நியமிக்க அல்லது தேர்தல் வரை இப்படியே இழுத்துவிடுவது என்கிற உத்தியாம்.
அட...கதை இப்படிப் போகிறதா ?! ஆனாலும், தேர்தல் அறிவிப்பு வெளியாயிட்டா தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றுமே, அப்போ என்ன செய்வாங்க ?!
அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே.
ஓ.....இந்தப் "பவர் பாலிடிக்ஸ்" அரசியல்வாதிகளை மட்டுமல்லாம அதிகாரிகளையும் ஆட்டுவிக்கிது. சரி...விஜய் பக்கமிருந்து ஒரு தகவலும் இல்லையா என்றோம்....
ஏன் இல்லை....நாளை விரிவாகச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சர்ரென பறந்து விட்டார் பருந்தார்.
நன்றி:-தமிழ் ஊடகம்,

admin
