எம்.பி.சீட்டு! தேமுதிகவுக்கு அல்வா கொடுத்த அதிமுக!
ஜி.சாந்தகுமார்,
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி தேமுதிகவிற்கு 2026ல் எம்.பி. பதவி என அல்வா கொடுத்திருக்கிறது.
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்கும்.
திமுகவில் அப்துல்லா, வில்சன், சண்முகம், வைகோ (மதிமுக) ஆகியோரும், அதிமுக சார்பில் சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி பதவிக்காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் மே 2ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வரை வாபஸ் வாங்கலாம். மே 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அப்படியிருக்க மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்குமாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில் பரிசீலித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவருமான தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிமுக தலைமையிலான தேமுதிக கூட்டணி தொடரும். 2026ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்கப்படும்.
தேமுதிக ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் சொன்னார்.
முன்னதாக அதிமுகவுடனான ஒப்பந்த கடிதத்தைக் காட்டி, அதனடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று தேமுதிக கோரியது. அதற்கு அந்த கடிதத்தில் ஆண்டு குறிப்பிடவில்லை ஆகவே அடுத்த ஆண்டு தான் உங்களுக்கு வாய்ப்பு என்று நைசாக தேமுதிகவை ஸ்கிப் செய்திருக்கிறது அதிமுக.

admin
