அதிமுக கூட்டத்தில் மர்ம ஆம்புலன்ஸ்! "பைபை ஸ்டாலின்" எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
ஜி.கே.சேகரன்,
அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும்... ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் தொடர்ந்து அதிமுக கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்கிறார்கள் அடுத்த கூட்டத்தில் இது போன்று வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்சில் அனுப்பிவிடுவோம் எடப்பாடி பழனிசாமி மழையிலும் பேச்சு
வேலூர்மாவட்டம், அனைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அனைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார் அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை.
நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன்.
எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை.
ஸ்டாலின் அவர்களே நீங்க என்னென்ன திட்டங்களை நிறுத்தினீர்களோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் தொடரும்.அனைக்கட்டு மக்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசுக்கு துப்பில்லை. திறமையான அரசு என்றால் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதி 100 கோடி ரூபாய் ஒதுக்கி, அண்டை மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்து இங்கு கொடுத்தோம். இப்போது விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
கொரோனா காலத்தில் கூட விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். குடிமராமத்து திட்டம் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். பேரிடரில் வறட்சி நிவாரணம் கொடுத்தொம்.
பயிர்க்காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கொடுத்தோம். டிராக்டர் கருவிகள் உரம் எல்லாத்துக்கும் மானியம் கொடுத்தோம். இப்படி ஏதாவது ஒரு திட்டம் கொடுத்தார்களா?
கட்டுமானப் பொருட்கள் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. சிமென்ட், கம்பி உரிமையாளர்களிம் பணம் வாங்கிக்கொண்டு விலையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
தேசிய அளவில் உணவு தானிய உற்பத்திக்கு தேசிய விருது பெற்றோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம்.

மிண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டிக்கொடுப்போம். தீபாவளி அன்றும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, ஏழைகளுக்கு நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் மகளிர் உரிமைத் தொகை கொடுத்ததைப் பற்றியே பேசுகிறார், அதிமுக அழுத்தம் கொடுத்ததால்தான் 28 மாதங்கள் கழித்து கொடுத்தனர். இப்போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் விதிகளைத் தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவி கஷ்டத்தைப் பார்த்து ஸ்டாலின் கொடுக்கவில்லை, தேர்தல் வருவதால் வாக்குகளுக்காகக் கொடுக்கிறார். தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றும் கட்சி திமுக. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக அறிவித்து கைவிட்டுவிட்டார்.
தூய்மைப் பணியாளர்களையும் அம்போவென விட்டுவிட்டார், ஆக தேர்தல் வந்தால் அழகழகாகப் பேசுவார்கள், ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்.
100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு பொய்யை பேசி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு 150 நாளாக உயர்த்தவில்லை, அதுக்கு பதிலாக 50 நாளாக ஆகிவிட்டது.
அவர்களுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் பேசி வாங்கிக்கொடுத்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. அதிமுக அட்சியில்தான் அதிகம் பேருக்கு பட்டா கொடுத்தோம்.
முதியோர் உதவித்தொகை அதிகமான பேருக்குக் கொடுத்ததும் அதிமுக அரசுதான். மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்துக்கு மானியம் கொடுத்தோம்.
அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அதன்மூலம் 2818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர்.
நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்ந்தது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என ஏராளமான கல்லூரிகளை திறந்தோம். கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம்.
ஆக அதிமுக ஆட்சியில் மாணவர், தொழிலாளர், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அவரவர் பிரச்னைக்கு ஏற்றவாறு தீர்வுகண்டோம்.
திமுக ஆட்சியில் போதைப் பொருள் பல வழிகளில் வந்துவிட்டது. இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. இத்தனைக்கும் முடிவுகட்டப்போகிறது 2026 தேர்தல். அணைக்கட்டில் கலை அறிவியல் கல்லூரி, அகரம் கிராமத்தில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என இந்த தொகுதிக்கு பல திட்டங்கள் கொடுத்தோம்.
அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு செயல்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்" என்று முடித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வீரமணி மற்றும் வேலழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

admin
