இரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே!

அல்-இர்ஃபான்,
இரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அவரின் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
வான்வழி தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் இயக்கம் உறுதி செய்துள்ளது.
இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய சில தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்கியதில் அவரும் அவரது பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 19 அன்று இரானில் அணுசக்தி நிலையத்தை சுற்றி வான் பாதுகாப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அதே முறையை இந்த தாக்குதலிலும் பின்பற்றியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
அந்த நடவடிக்கையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானிய வான்வெளிக்கு வெளியில் இருந்து ராக்கெட்டுகளை வீசியதாக நம்பப்படுகிறது.
சௌதி அரேபியாவின் அல் ஹதாத் செய்தி நிறுவனமும் இதேபோன்ற தகவலைத் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் இல்லம், வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் தாக்கப்பட்டதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானின் அரசு ஊடகமும் இதையே கூறியுள்ளது.