ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள்ஏமாளி அல்ல!இ.பி.எஸ். பேச்சு!

க.பாலகுரு,
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என திருத்துறைப்பூண்டியில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இதனால் தமிழக பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இறுதியாக இரவு திருத்துறைப்பூண்டியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: எனது சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். எனது சம்பந்தி வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததற்கும், எனக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு. பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுமே திமுகவும், கூட்டணி கட்சிகளும் அச்சமடைந்து விட்டன. எங்களுக்கு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு ஒன்று சேர்ந்து வருகிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணையவுள்ளன.
ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அதைப்பத்தி கவலை இல்லை.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எங்களைப் போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் என் நிலைப்பாடு. இன்னும் சில கட்சிகள் வர இருக்கிறது. சரியான நேரத்தில் வரும். ஸ்டாலின் அவர்களே 200 சீட்டில் ஜெயிப்பதாக சொல்கிறீர்கள்.
நிஜத்தில் 210 தொகுதிகளை அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும். கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது. பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.