தாயை வெயிலில் வீசி விட்டுச் சென்ற கொடூர பிள்ளைகள்!
கு.அசோக்,
தள்ளாடும் வயதில் தாயை பொது கழிப்பிடம் முன்பு இரக்கமில்லாமல் விட்டு சென்ற மகன், மகள் - உடையின்றி கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டு வரும் கொடூரம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போர்டிங் தெரு பகுதியில் தள்ளாடும் வயதில் நோய்வாய்ப்பட்ட தாயை கவனிக்க முடியாமல் மகனும் மகளும் அதே பகுதியில் உள்ள பொதுக்கழுப்பிடத்திற்கு வெளியே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர் போர்டிங் தெருவை சேர்ந்த மூதாட்டி சாலம்மாள்(75). இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஏற்கனவே இரு மகள்கள் உயிரிழந்து விட்ட நிலையில், மகன் முருகன் மற்றும் மகள் செல்வி ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர்.
சாலம்மாள் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இதனால் தாயை கவனிக்க முடியாத மகனும் மகளும் சேர்ந்து அவரை அதே பகுதியில் உள்ள அரசு பொதுக்கழிப்பிடத்திற்கு வெளியே கிடத்திவிட்டு சென்றதாக தெரிகிறது.
கொளுத்தும் வெயிலில் உடலில் உடை கூட இல்லாமல் உணவென்று தவித்து வரும் மூதாட்டிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் உணவளித்து வருகின்றனர். உடல்நிலை முடியாத தாயை பெற்ற பிள்ளைகளே கழிப்பிடத்திற்கு வெளியே அனாதையாக விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாயை இரக்கமில்லாமல் விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
