பெருந்துறையில் திமுகவுக்கு பெரும் துயரம்!
தி.மைக்கேல்,
பெருந்துறை தொகுதியில் இம்முறை இத்தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திமுக தொடங்கிய பிறகு இங்கு நடைபெற்ற 14 தேர்தல்களில் 3 முறை மட்டுமே இந்த தொகுதியில் திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் ஆகியவை பெருந்துறையின் பிரதான தொழில்களாகும்.
திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி, குன்னத்தூர் போன்ற பேரூராட்சிகளுடன் ஈரோடு மாவட்டத்தின் புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி , நெட்டிச்சிபாளையம், செட்டிக்குட்டை, வளையபாளையம், கணபதிபாளையம், தோரணவாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களூர், பாண்டியம்பாளையம், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, கந்தம்பாளையம், பெரியவிளாமலை, சின்னவிளாமலை என 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள், ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் உள்ளன.
இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், பட்டியல் வகுப்பினர், முதலியார், நாடார், வேட்டுவக் கவுண்டர், செட்டியார், சிறுபான்மையினர், வடமாநிலத்தவர் என அடுத்தடுத்து அதிக இடங்களில் உள்ளனர்.
பிரச்சினைகள்
சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், பெருந்துறை தொகுதி முழுவதும் நிலத்தடி நீர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தொழில்துறைக்கு மட்டுமல்லாது, குடிநீருக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனாலும் அனைத்து கிராமங் களுக்கும் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி- அத்திக்கடவு திட்டப் பணிகள் முழுமை பெற்றாலும், பவானி ஆற்றில் உபரி நீர் வந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு எப்போது ஏற்படும் என காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த தொகுதியில் கடந்த 1957 முதல் 2021 வரை 18 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்த போதிலும், திமுகவால் ஒரு முறை கூட வெற்றி பெற முடியாத தொகுதியாக பெருந்துறை தொகுதி உள்ளது.
மற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக 9, இந்திய கம்யூனிஸ்ட் 4, காங்கிரஸ் கட்சி 1, சோசலிஸ்ட் கட்சி 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் திமுக சார்பில் அதிமுக ஆட்சியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம், அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.ஜெயக்குமார், தவெக சார்பில் வி.பி.அருணாச்சலம், நாதக சார்பில் சி.லோகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2021-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேச்சையாக தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு 9,895 வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பிடித்தார். இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அவர், ஆளும்கட்சி வேட்பாளர் என்ற பலத்துடனும், உற்சாகத்துடனும் களம் இறங்குகிறார்.
10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொகுதியில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள எஸ்.ஜெயக்குமாருக்கு அதிமுக இரண்டாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளது. இவர், கட்சியினரை அரவணைத்துச் செல்லக் கூடியவர்.
தவெக வேட்பாளர் வி.பி.அருணாச்சலம் இந்த தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த வி.பி.பெரியசாமியின் சகோதரர்.
74 வயதான இவர் பெருந்துறை பகுதியில் அதிமுகவினரிடம் நன்கு அறிமுகமானவர். இவர் விஜய் ஆதரவு வாக்குகள் மட்டும் அல்லாது, அதிமுக வாக்குகளையும் கணிசமாக ஈர்ப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சியான தவெக என அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் போட்டியாக நாதக வேட்பாளர் சி.லோகநாதனும், பிரச்சார களத்தில் உற்சாகமாக செயல்பட்டு வருவதால், இந்த முறை பெருந்துறை தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,02,853
பெண் - 1,11,572
மூன்றாம் பாலினத்?தவர் - 6
மொத்த வாக்காளர்கள் - 2,14,431

admin
