டூ...லேட் ஆபிசர்! நட்சத்திர பேச்சாளார்களுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

டூ...லேட் ஆபிசர்! நட்சத்திர பேச்சாளார்களுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

 ம.பா.கெஜராஜ்,

 பிரச்சாரத்தின்போது, அவதூறு, சர்ச்சை கருத்துகளை தெரிவிக்க கூடாது. வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தி, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் நேற்று மீண்டும் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது

   தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் அமைப்புச்சட்டம் ரத்து, அக்னிபாத் சர்ச்சை, சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 மக்களவை தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இந்தியதேர்தல் ஆணையம் நேற்று அறிவுரை வழங்கியுள்ளது.

  அந்த வகையில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

   கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும்போது சரியான வார்த்தைகளை பேசுவதற்கும்,அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தை பேணுவதற்கும், முறையான குறிப்புகளை கட்சித் தலைமை வெளியிட வேண்டும்.

  சாதி, மதம் தொடர்பான வெறுப்பு கருத்துகளை கட்சிகளின் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் பேசாமல் தவிர்க்க வேண்டும். சாதிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக, நாட்டின் சமூககட்டமைப்பு, தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

  'இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும்' என்பதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம். இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை எந்த கட்சியும் தெரிவிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கட்சியின் பேச்சாளர்கள் தெரிவிக்க வேண்டாம்.

இதுதொடர்பாக தங்களது அதிகாரப்பூர்வ பேச்சாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்க வேண்டும்.

மதம், இனம் சார்ந்த பிரச்சாரங்களை எந்த கட்சியும், எந்த பேச்சாளர்களும் இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் 'அக்னி வீர்' திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசும்போது, நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து பேசி அரசியலாக்க கூடாது என  அக்கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 மேலும், 'தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சித் தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்று இருகட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.