வரி ஏய்ப்பில் வேலூர் மாநகராட்சி! சொத்து வரி கட்டாமல் இருந்தால் என்ன நடக்கும்?

வரி ஏய்ப்பில்  வேலூர் மாநகராட்சி! சொத்து வரி கட்டாமல் இருந்தால் என்ன நடக்கும்?

  ச.விஜய்,

 கிராமம், நகரம் அல்லது மாநகரம் சீராக வளர வேண்டும் என்றால் சாலைகள், தெருவிளக்குகள்,   கழிவுநீர் கால்வாய்கள், குப்பை அகற்றும் அமைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்..

   இந்த பொதுச் சேவைகளை மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு கிடைக்கும் முக்கியமான வருவாய் மூலங்களில் ஒன்று சொத்து வரியாகும்.

   ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் தங்களுடைய பெயரில் வைத்திருக்கும் நிலம் அல்லது கட்டிடங்களுக்காக ஆண்டுதோறும் அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தும் கட்டாயக் கட்டணத்துக்கு பெயரே சொத்து வரி.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளே பொதுவாக இந்த வரியை வசூலிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த வரி வசூலிக்கப்பட்ட பிறகு அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

 இப்படிப்பட்ட வரியானது  கணக்கிடும் முறை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாறுபடலாம்.

 பொதுவாக ஒரு கட்டிடத்தின் மொத்தப் பரப்பளவு, அதன் பயன்பாடு, கட்டிடத்தின் வயது மற்றும் அது அமைந்துள்ள பகுதி போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையாகக் கொண்டு வரி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது..

 பல நகரங்களில் தற்போது "Unit Area Value" எனப்படும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சதுர அடி பரப்பளவுக்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, அதனை கட்டிடத்தின் மொத்த பரப்பளவுடன் பெருக்கி வரி கணக்கிடப்படுகிறது.

  "சில பகுதிகளில் "Annual Rental Value"என்ற முறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் அந்த சொத்தினால் வருடத்திற்கு கிடைக்கக்கூடிய வாடகை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வரி மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது".

  மேலும் கட்டிடத்தின் கட்டுமான வகை, அதன் வயது மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சில தள்ளுபடிகளும் வழங்கப்படலாம்..

உள்ளாட்சி அமைப்புகள் அவ்வப்போது தங்களுடைய எல்லைக்குள் உள்ள பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய கட்டிடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதிக்கின்றன.

  அதற்கேற்ப சொத்து வரி மதிப்பை மாற்றியமைக்கும் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து சொத்துகளும் சரியான முறையில் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.

  இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. நாம் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுவது, தெருவிளக்குகள் செயல்படுவது, கழிவுநீர் வடிகால் அமைப்புகள் பராமரிக்கப்படுவது, குப்பைகள் அகற்றப்படுவது போன்ற பல சேவைகள் இந்த வரிப்பணத்தின் மூலமே நடைபெறுகின்றன.

 இதன் மூலம் பூங்காக்கள், பொது நூலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்களின் பராமரிப்பிற்கும் நிதி கிடைக்கிறது.

  அதே நேரத்தில் சொத்து வரியை சரியான காலக்கெடுவுக்குள் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். வரி செலுத்த வேண்டிய காலக்கெடு முடிந்த பிறகு, செலுத்தப்படாத தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்படும். இதனால் நிலுவைத் தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் இணைப்பு அல்லது பாதாளச் சாக்கடை இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

  "பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டமே சரிவர இல்லை என்பது தனிக்கதை"

   மிக தீவிரமான நிலுவை நிலை ஏற்பட்டால் அந்த சொத்தை சட்டரீதியாக முடக்கம் செய்வதற்கும் அல்லது ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.

   எனவே நாம் வாழும் பகுதியின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கும் சொத்து வரியை நேரத்தில் செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகவும் கடமையாகவும் கருதப்படுகிறது. (இதெல்லாம் பொது மக்களுக்குத்தான்).

 சரியான நேரத்தில் வரி செலுத்துவது நம் பகுதியின் முன்னேற்றத்திற்கும் சமூகத்தின் நலனிற்கும் நேரடியாக பங்களிப்பதாகும்.

  எல்லாம் சரிங்கோ புதியதாக கட்டப்பட்டுவரும் பல வணிகவளாகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு வரைபட ஒப்புதல் பெறாமலேயே கட்டுமானபணிகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு வருவாய்க்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

  குறிப்பாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இவை அதிகம் காணப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் பலர் இதில் குளிர் காய்கிறார்கள். இது பற்றி தோண்டினால் மதுரை போலத்தான் நடக்கும்.