முக்கிய தபால் நிலையங்களுக்கு மூடு விழா ! கோட்ட நிர்வாகத்தில் சர்வாதிகார அதிகாரி ! அரசு பெயரை கெடுத்து குட்டிசுவராக்கி வருகிறார்!

முக்கிய தபால் நிலையங்களுக்கு மூடு விழா !   கோட்ட நிர்வாகத்தில் சர்வாதிகார அதிகாரி ! அரசு பெயரை கெடுத்து குட்டிசுவராக்கி வருகிறார்!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் அஞ்சலக கோட்ட அலுவலக நிர்வாகத்தைக் கண்டித்து தபால் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. குறிப்பாக கோட்ட அளவிலான அதிகாரி தம்மிடம் பணியாற்றும் அலுவலர்களையும் ஊழியர்களையும் கிட்டதட்ட சர்வாதிகார போக்கில் நடத்துவதாக கூறப்படுகிறது.

  முக்கிய தபால் நிலையங்களுக்கு மூடு விழா செய்வதும், தாழ்த்தப்பட்ட ஊழியர் பணியாற்றும் தபால் அலுவலகத்தை சாக்கடைக்கு அருகே வைத்து அழகு பார்க்கிறார் என்றும் குமுறுகிறார்கள்.

  அந்த ஆர்பாட்டத்திற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீசில் கீழ் கண்ட வரிகள் இடம்பிடித்திருந்தன.

 அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.

 தமிழில் சில பழமொழிகள் உண்டு. புலி இளைத்தால் எலி தொட்டு விளையாட அழைக்குமாம், பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து ஆடுவானாம்... அது போன்று இன்றைக்கு தொழிற்சங்கங்கள் பிரிந்து இருப்பதால், வேலூர் கோட்ட அஞ்சல் நிர்வாகம் தான் தோன்றிதனமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நினைப்பில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக இயங்கி கொண்டிருந்த பாக்கியாத் துணை அஞ்சலகம், கொசப்பேட்டை துணை அஞ்சலகம், வேலூர் தெற்கு மற்றும் காந்திநகர் மேற்கு போன்ற அஞ்சலகங்களை மூடி பொதுமக்களுக்கும், ஏழை, எளிய, மக்களுக்கும், ஊழியர்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் பரிசு வழங்கியுள்ளது. ஒரு அஞ்சலகத்தை திறப்பதற்கு நம் முன்னோர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள், எப்படி உழைத்து இருப்பார்கள். அஞ்சலகங்களில் பொதுமக்களுக்கும், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் ஏராளமான சேவை செய்து இருப்பார்கள். எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் SB, RD, PLI கணக்குகளை துவக்கி இருப்பார்கள் என்பதை எல்லாம் சிறிதும் நினைத்து பார்க்காமல், வேலூர் கோட்ட நிர்வாகம் தானடித்த மூப்பாக திடீரென்று நான்கு அஞ்சலகங்களையும் மூடி விட்டது.

 பாக்கியாத் S.O மூலமாக இஸ்லாமிய மக்களும், மாணவர்களும், சிறு வியாபாரிகளும் பயன் அடைந்துக்கொண்டிருந்தார்கள். அதை மூடி அந்த பகுதி மக்கள் பெற்றுவந்த அஞ்சல் சேவையை கோட்ட நிர்வாகம் பறித்துக்கொண்டது. அப்பகுதி சிறுபான்மை மக்கள் மீது கோட்ட நிரவாகத்திற்கு ஏன் இந்த காழ்புணர்ச்சி என்று தெரியவில்லை?

  அலமேலுமங்காபுரத்தில் புதியதாக அவசர கதியில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தில் கழிப்பறை வசிதியே இல்லை. பாக்கியாத் S.O-வில் இருந்த ஒரு மூத்த பெண் ஊழியரை அலமேலுமங்காபுரத்தில் SPM-ஆக நியமித்துவிட்டு அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும் கொடுமை இழைக்கப்படுகிறது. கழிப்பறைக்கு செல்வதற்கு 3வது மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது, அது வரையில் அலுவலகம் என்ன ஆவது? பொதுமக்கள் பொறுப்பார்களா? மூட்டுவலி, சர்க்கரை, B.P நோயால் அவதிப்படும் ஒரு பெண் ஊழியர் 3வது மாடிக்கு ஏறி, ஏறி இறங்க முடியுமா? கோட்ட நிர்வாகத்தற்கு சிறிதளவாவது மனசாட்சி இருக்குமா? காந்தி நகர் மேற்கு துணை அஞ்சலகத்தை மூடிவிட்டு கரசமங்கலம் துணை அஞ்சலகமாக தரம் உயர்த்த கோட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது கரசமங்கலம் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வந்த அதே கட்டிடத்தில் காந்தி நகர் மேற்கு துணை அஞ்சலகத்தின் மேசை, நாற்காலி, கணினி போன்றவை கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தல் மின் இணைப்பே இல்லை என்பது தான் உச்ச கட்ட கொடுமை. அந்த கட்டிடத்தில் கழிவறை உள்ளது. ஆனால் குழாய் இணைப்பு இல்லை. ஒரு குடத்தில் வெளியில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு வர வேண்டுமாம்.

(என்ன கொடுமை சார் இது) இதிலிருந்தே வேலூர் கோட்ட அஞ்சல் நிர்வாகம் எந்த ஒரு முறையான திட்டமிடல் இல்லாமல் அஞ்சலகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது என்பது தெளிவாகிறது. புதிய கட்டிடத்தை தேடும் பணியில் இனிமேல் தான் கிழக்கு உபகோட்ட அதிகாரி களம் இறங்க போகிறாராம். புதிய கட்டிடத்தை அடையாளம் கண்டு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட கரசமங்கலம் துணை அஞ்சலகம் செயல்பாட்டுக்கு வர இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்று கோட்ட அலுவலகத்தில் இருந்தும், கிழக்கு உபகோட்ட அலுவலகத்தில் இருந்தும் செய்திகள் கசிகின்றன.

கொசப்பேட்டையும், வேலூர் தெற்கு மற்றும் காந்திநகர் மேற்கு சிறப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகங்கள் இவை மூன்றையும் மூட வேண்டிய காரணம் என்ன? பொதுமக்கள் சேவை புறக்கணிக்கப்படாதா? அங்கு உள்ள SPM, GDS-களை எங்கு இணைப்பீர்கள். LSG SPM அலுவலகங்களை மூடியதால் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த LSG SPM-கள் வேறு கோட்டத்திற்கு செல்ல வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். GDS பணியிடங்கள் ஒழித்து கட்டப்படுகிறது. இவை எல்லாம் களைய வேண்டியும், மூடப்பட்ட நான்கு அஞ்சலகங்களையும் மீண்டும் அதே இடத்தில் இயங்கவும் உடனடியாக கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய ஒன்றுபட்ட போராட்டம் தொடரும். தோழர்கள், தோழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  இதுகுறித்து தபால் துறையின் உயர் அதிகாரிகள் கண்டுகொண்டால் மக்கள் நலம் காக்கப்படும், மத்திய அரசின் பயன்களும் மக்களை சென்றடையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

   அஞ்சலக கோட்ட அலுவலக சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்தெல்லாம் விளக்கம் அளிக்க முன் வந்தால் அதை பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.