பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா:- நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அதிமுக!

பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா:- நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அதிமுக!

 நரேஷ்.என்,

  பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிப்பு: பாஜ எம்பி அபராஜிதா சாரங்கி தலைவர்; அதிமுக எம்பி சி.வி. சண்முகத்திற்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆக.20 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மசோதா தொடர்பாக ஆய்வு செய்ய பா.ஜ.க எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும் பதவி விலக மறுத்ததால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக பா.ஜ.க தெரிவித்தது.

  இருப்பினும் இந்த மசோதா எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒடுக்கும் தந்திரம் என்று குற்றம் சாட்டப்பட்டதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க எம்பி அபராஜிதா சாரங்கி கூட்டுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் 31 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

   பா.ஜ.க.வை சேர்ந்த 15 பேர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேர், எதிர்க்கட்சி எம்பிக்கள் 4 பேர், ஒரு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சி எம்பி சுப்ரியா சுலே, அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஒய்எஸ்ஆர்சிபி எம்பி நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் எதிர்க்கட்சி சார்பில் இடம் பெற்றுள்ளனர்.

  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவில் இடம்பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளன.

   இந்தியா கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகியவையும் இந்தக் குழுவில் இருந்து விலகி உள்ளன. மாநிலங்களவை நியமன உறுப்பினர் சுதா மூர்த்தியும் இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

 தலைவர் பதவியில் நியமிக்கப்பட்ட அபராஜிதா சாரங்கியைத் தவிர, பாஜவின் மக்களவை உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், பர்த்ருஹரி மஹ்தாப், பிரதான் பருவா, பிரிஜ்மோகன் அகர்வால், விஷ்ணு தயாள் ராம், டி கே அருணா, பர்ஷோட்டம்பாய் ரூபாலா, அனுராக் தாக்கூர் ஆகியோரும்,   பாஜவின் மாநிலங்களவை எம்பிக்களான பிரிஜ் லால், உஜ்வல் நிகம், நபம் ரெபியா, நீரஜ் சேகர், மனன் குமார் மிஸ்ரா மற்றும் கே லக்ஷ்மண் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

   அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் லாவு ? கிருஷ்ண தேவராயலு (தெலுங்குதேசம்), தேவேஷ் சந்திர தாக்குர் (ஐக்கிய ஜனதாதளம்), தைர்யஷீல் மானே (சிவசேனா), பாலஷோவ்ரி வல்லபனேனி (ஜனசேனா), இந்திரா ஹாங் சுப்பா (சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா), சுனில் தட்கரே (தேசியவாத காங்கிரஸ்), எம்.மல்லேஷ் பாபு (ஜேடிஎஸ்பி-எஸ்), வெர்யேஷ்பாஸ் (மதச்சார்பற்ற ஜனதாதளம்), ஜோயந்தா பிரேந்திர பிரசாத் பைஷ்யா (ஏஜிபி, சி.வி சண்முகம் (அதிமுக) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.