கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! இராணிப்பேட்டை - திருப்பத்தூரில் பரபரப்பு!

கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! இராணிப்பேட்டை - திருப்பத்தூரில் பரபரப்பு!

கு.அசோக்,

 ஆம்பூர் அருகே கிராம சபை கூட்டத்தில் விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு - விவசாய நிலத்திற்குள் கழிவு நீர் புகுந்து விவசாய கிணறு உள்வாங்கியதால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளானதை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என விவசாயி வேதனை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு  கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி முத்துக்குமரன் என்பவர் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தினார்.

  தன்னுடைய விவசாய நிலத்திற்குள் கழிவு நீர் புகுந்து தேங்குவதால் கடந்த ஆறு மாத காலமாக விவசாயம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு விவசாய கிணறு கழிவு நர் முழுவதும் தேங்கி உள்வாங்கியதால் விவசாயத்திற்கும் குடிநீராக பயன்படுத்துவோம் கால்நடைகளுக்கும் பயன்படுத்தவும் முடியாமல் விவசாயி வேதனைக்குள்ளாவதாக தெரிவித்தார்.

  மேலும், கழிவுநீர் விவசாய நிலத்திற்கு வருவதை தடுக்க கோரியும் பாதிப்பினை சரி செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

  எனவே மீண்டும் கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்துள்ளார் அப்போதும் விவசாயியின் பிரச்சனைக்கு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் விரக்தியடைந்த  விவசாயி முத்துக்குமரன் திடீரென கிராம சபை கூட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

 உடனடியாக அங்கிருந்த  இளைஞர்கள் சிலர் மற்றும் காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி வீசி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

 காவல்துறையினர் அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பாதிக்கப்பட்ட விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இதனை தொடர்ந்து காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் விவசாயி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து விவசாய கிணற்றில் கழிவு  நீர் தேங்கி நின்றதால் கிணறும் உள்வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தான் காரணம்.

 எனவே அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டுமெனவும் இல்லை எனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே இருந்து வரும் கருத்து வேறுபாடு காரணமாக மாறி மாறி பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து தீர்வு காணாததால் விவசாய நிலத்தில் கழிவுநீர் தேங்குவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் துறை சார்ந்த அதிகாரிகள் இடத்திலும் புகார் அளித்தும் கண்டுகொள்ளாதது இதற்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,

பகுதிநேர நியாயவிலைக்கடை சாலைவசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென நந்திமங்கலம் கிராமசபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கை

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் 77வது குடியரசு தின விழா முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் 100 நாள் பணி அனைவருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலி பணத்தை வழங்க வேண்டும், புலிவலம் பானாவரம் மெயின் ரோட்டில் இருந்து நந்தியமங்கலம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

 நந்திமங்கலம் கிராமத்தில் இருந்து கட்டாரிகுப்பம் வரை சேதம் அடைந்த ஜல்லிசாலை  வழியாக தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் விவசாயிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்த சேதமடைந்த ஜல்லி சாலை சீரமைக்க வேண்டும்.நந்திமங்கத்திலிருந்து மயானத்துக்கு செல்லும் சாலை இடையே ஓடை கால்வாயில்  கல்வெட்டு அமைக்க வேண்டும்,இதனை தொடர்ந்து கரிக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தங்கினார்.

 கூட்டத்தில் 100 நாள் பணிகள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அந்தந்த பகுதியிலேயே பணி வழங்க வேண்டும்.கலைஞர் கனவு இல்லம் வீடு கேட்டு ஐம்பதுக்கு மேற்பட்டோர் கோரிக்கை வைத்தனர்.

 கரிக்கல் மெயின் ரோட்டில் இருந்து இருளர் குடியிருப்பு, கரிக்கல் ரெண்டாடி வரை சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், இருளர் குடியிருப்பு பகுதிக்கு பகுதி ரேஷன் கடை அமைப்பு தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.