பசுக்களை கடத்தியதாக சாலையில் ஊர்ந்து செல்ல வைத்த கொடூர சம்பவம்!

பசுக்களை கடத்தியதாக சாலையில் ஊர்ந்து செல்ல வைத்த கொடூர சம்பவம்!

NARESH.N,

பசுக்களை கடத்தியதாக கூறி தலித் இளைஞர்களை மொட்டையடித்து சாலையில் ஊர்ந்து செல்ல வைத்த கொடூர சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், இரண்டு தலித் இளைஞர்கள் பசு கடத்தியதாகப் பொய்ப் புகார் கூறி, கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

 திருமணத்திற்காக வரதட்சணையாக மாடுகளைக் கொண்டு சென்ற அவர்களை வழிமறித்த கும்பல், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

 பணம் தர மறுத்ததால், இருவரையும் அரைநிர்வாணமாக்கி, மொட்டையடித்து, கயிற்றால் கட்டி, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றும், ஊர்ந்து செல்ல வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

  மேலும், மாடுகளுக்கு உணவாக கொடுக்கும் புல்லைத் தின்ன வைத்தும், சாக்கடை நீரைக் குடிக்க வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர்கள், கும்பலிடமிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூர சம்பவத்திற்குக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 மேலும், தலித்துகளின் கண்ணியத்தைச் சிதைக்கும் ஒவ்வொரு சம்பவமும் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்ற எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஒடிசா சம்பவத்தை கண்டித்துள்ளனர்.