“அனுமதியின்றி வெளியிட்டால் விதிமீறல்!” — எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் எச்சரிக்கை

“அனுமதியின்றி வெளியிட்டால் விதிமீறல்!” — எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் எச்சரிக்கை

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை: சட்டப்பேரவை அறிவிப்புகளை பேரவைத் தலைவரின் அனுமதிக்கு முன்பாக சமூக வலைதளங்கள், யூடியூப், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விதி 55, 56 உள்ளிட்ட விதிகளின் கீழ் உறுப்பினர்கள் அளிக்கும் அறிவிப்புகள், சட்டப்பேரவை செயலாளர் அல்லது பேரவைத் தலைவரிடம் வழங்கப்பட்டு, உரிய அனுமதி பெற்ற பின்னரே அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.

ஆனால், சில உறுப்பினர்கள் தாங்கள் அளிக்கும் அறிவிப்புகளை உடனடியாக யூடியூப், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு வழங்குவதாக தெரிய வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை உறுப்பினர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட முகநூல் பக்கங்கள், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பேரவை அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். பேரவைத் தலைவரின் அனுமதி கிடைக்கும் முன்பாக அவற்றை வெளியிடுவது பேரவை விதிகளுக்கு முரணானது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேரவை விதி 36 உட்பிரிவு 5-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பேரவைத் தலைவர் அனுமதித்து சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அனுப்பும் வரை அந்த அறிவிப்பை உறுப்பினரோ அல்லது வேறு எவரோ வெளியிடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த அறிவுறுத்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

பேரவை விதிகளுக்கு உட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் கடுமையாக அறிவுறுத்தினார்.