தேர்தல் ஆணையத்தின் படிகளைத் தொட்ட திருட்டு மண் குவாரி! அரக்கோணம் தாசில்தார் தடை செய்து அதிரடி! நிரந்தரமாக மூடு..இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு!
ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியன்று சட்டபேரவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதை அறிவோம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஏரியில், அரசை ஏமாற்றி மண் குவாரி ஒன்று செயல்பட்டுவந்தது.
அப்படியிருக்க நேற்று மார்ச் 24- அன்று அரக்கோணம் தாசில்தார் வெங்கடேசன் என்பவர் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த திருட்டு மண் குவாரியை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
எனவே சுமார் 300 டிப்பர் லாரிகளுக்கு மேல் ஏரிக்கு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டு அவை பிரதான சாலையிலும் பெட்ரோல் பங்கிலும் நிற்கவைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
இது ஒரு புறம் இருக்க மண் திருடுவடை நிறுத்திவிட்டனரா என்பதை கண்காணிக்க போலீசாரும் அங்கு வாக்கிடாக்கியுடன் சென்றிருந்தனர்.
இது குறித்து விசாரித்த போது இந்த திருட்டு குவாரியை தில்லாக நடத்துங்கள் என்று எதிர்கட்சி வரிசையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தான் பச்சை இலை...சாரி பச்சை கொடிகாட்டினாராம்.

தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கூட கனிம வளத்தை திருட்டுதனமாக அள்ளுவதற்கு அந்த சட்டமன்ற உறுப்பினர் துணை போவது மக்களை எரிச்சலடைய செய்திக்கிறது.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் சென்ற போது ஏரியில் ஆங்காங்கே பணியாளர்கள் காணப்பட்டனர். மேலும் இரண்டு சொகுசு கார்கள் அங்கு வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இது குறித்து தாசில்தாரிடம் விவரம் அறிய அவரை தொடர்பு கொண்டோம். அதில் சார் இரண்டு நாட்களாக கனிமவள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு இது தொடர்பாக புகார்கள் வந்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். ஆகவே அதை தடை செய்துவிட்டோம் என்றார்.
இது குறித்து ஏரியை சுற்றியிருக்கும் மக்கள் தெரிவிக்கையில், மண் எடுக்க லாரிகளை உள்ளே அனுமதிக்காதது சந்தோஷம் தான். ஆனால் லாரிகள் இங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவற்றை அங்கிருந்து அகற்றினால் மட்டுமே எங்களுக்கு முழு நம்பிக்கை வரும்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி பிரமுகர்களின் ஆதரவினால் இங்கு மண் திருடுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது.
மீறினால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்கிறார்கள்.
புகார்களின் விவரம்,
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், கனிமவள இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆகி«யோர்களுக்கு புகார்கள் பறந்துள்ளன. தமிழ்நாடு சுன்னத் ஜமா அத் சார்பில் ஷெரிப்பாஷா மற்றும் ஊடக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழன் வடிவேலு ஆகியோர் அனுப்பிவைக்கப்பட்ட அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது,
தேர்தல் நடத்தை விதிமுறையை மீறும் விதமாக பல லட்சம் பணத்தை புழக்கம் ஏற்படுவதற்கு வழிவகை ஏற்படுத்துகிறார்கள் - அரசு பணிக்காக மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த பணிகள் முடிவடைந்தும் அரசு பணிக்கு மண் சப்ளை செய்வதாக போக்குக்காட்டி சட்ட விரோதமாக நாளொன்றுக்கு சுமார் 600 டிப்பர் லாரிகளில் மண் கடத்தி வருகிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமம், புலன் எண்.220/1, பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டிலுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியிலிருந்து "ADEN/KPD Subdivision Development of Goods Shed at MCN Station" Railway work பணிக்காக 20000 கனமீட்டர் மண் எடுத்து சப்ளை செய்ய ஷி.தாமோதரன் என்பவருக்கு, இராணிப்பேட்டை மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அவர்களால் 1959-ம் வருடத்திய தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் விதி எண்.7 கீழ் 3 மாதங்களுக்கு குவாரி அனுமதி வழங்கப்பட்டது.
அனுமதி பெறப்பட்ட "ADEN/KPD Subdivision Development of Goods Shed at MCN Station" Railway work தற்போது முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் மேற்படி அரசு பணிக்காக மண் எடுத்துச் செல்வதாக கூறிக்கொண்டு செங்கல் சூளைக்கும், வணிக ரீதியாக பயன்பாட்டிற்கும் மற்றும் தனி நபர்களுக்கு வெளிசந்தையில் அதிக விலைக்கு மண் விறக்கப்படுகிறது. இதற்காக ராட்சத இயந்திங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுவரை ஏரியில் அனுமதியளிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சுமார் 95,000 கனமீட்டர் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனிம வளத்துறை மற்றும் அரசு வருவாய் துறைக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இராணிப்பேட்டை மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு புகார் அளிக்கப்பட்டும், அவர் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
மண் கொள்ளையில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் சிலர் சதவிகித அளவில் ஒப்பந்தம் போட்டுள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இலுப்பை தண்டலம், தக்கோலம், நெமிலி, அரிகல்பாடி, பனப்பாக்கம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பல பகுதிகளுக்கு கிருஷ்ணாபுரம் ஏரியிலிருந்து கனிம வளங்களை நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 லாரிகள் மூலம் கடத்தி செல்லப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அளவுக்கு டிப்பர்களில் மண் கடத்துகிறார்கள், இதனால் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மீறப்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில் நாளொன்றுக்கு
சுமார் 50 லட்சங்கள் வரை அங்கு பணம் புழங்குகின்றது. இரயில்வே
பணிக்கு மண் சப்ளை செய்ய அனுமதி பெற்றுக் கொண்டு, அந்தஅரசுப்பணி முடிந்த பின்னரும், செங்கல் சூளை மற்றும் வணிக ரீதியான இடத்திற்கு மண் கடத்தி விற்பனை செய்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல லட்சங்களை புழக்குகிறார்கள்.
ஆகவே தேர்தல் அலுவலர் அவர்கள் மேற்படி ஏரி குவாரியை தடை செய்து, தேர்தலில் செலவிடுவதற்காக பணம் திரட்டப்படுவதை முற்றிலும் தடுத்த நிறுத்தவும், சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவரும் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர் அரசுக்கு ஏற்படுத்திய வருவாய் நஷ்டத்தை மீட்கும்படியும் சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்காக பயன்படுத்திவரும் இயந்திரங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

admin
