ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – அரசியல் நாகரிகம் எங்கே-!

ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – அரசியல் நாகரிகம் எங்கே-!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை:அரசியல் மேடைகளில் கடு,மையான விமர்சனங்கள் இடம்பெறுவது இயல்புதான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் தனிநபர் மீதான தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது அரசியல் நாகரிகத்துக்கு அழகல்ல என்ற எதிர்ப்பு தற்போது வலுத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்ப்புகள் எழுந்தன.

ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திருக்குறளை மேற்கோள் காட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு கேள்வி மட்டும் அரசியல் களத்தில் தொடர்ந்து எழுகிறது.பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் ஒரு மூத்த தலைவரிடம் மக்கள் எதிர்பார்ப்பது ஆவேசமான வார்த்தைகளையா? அல்லது அரசியல் நாகரிகத்துடன் கூடிய கருத்துகளையா?

அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கும், தனிநபர்களை இழிவுபடுத்துவதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த எல்லையை ஒரு மூத்த அரசியல் தலைவர் கடக்கும்போது, அவரது அரசியல் தலைமைத்துவத் தகுதி குறித்தே கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

பேச்சை திரும்பப் பெறுவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இனி அரசியல் விவாதங்கள் கொள்கை மற்றும் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு நடைபெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி: ம.பா. கெஜராஜ