பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு நியமனங்களில் அரசியல் சார்பு? ஓய்வூதியம் பெற விதிகளை தளர்த்துங்கள் – IFWJ வலியுறுத்தல்!

பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு நியமனங்களில் அரசியல் சார்பு? ஓய்வூதியம் பெற விதிகளை தளர்த்துங்கள் – IFWJ வலியுறுத்தல்!

செய்தி: ம.பா.கெஜராஜ்,
சென்னை, செப்.22:,

தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு மற்றும் பத்திரிகையாளர் நலவாரியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் (IFWJ) தேசியச் செயலாளர் கே. அசுதுல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு மற்றும் நலவாரியத்தில் பத்திரிகை ஊடகத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பதே வழக்கமாக இருந்து வந்ததாகவும், அதற்கான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சில நியமனங்கள் தொடர்பாக அரசியல் சார்பு குறித்த சந்தேகங்கள் எழுவதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மற்றும் அரசியல் சார்பு கொண்டவர்கள் என தாங்கள் கருதும் நபர்கள் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கே.அசுதுல்லா தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு மற்றும் நலவாரியத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக வெளிப்படையாக செயல்படாத, தொழில் தகுதியும் அனுபவமும் கொண்ட பத்திரிகையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நியமனங்கள் குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு தெரியாமல் நடைபெற்றதா அல்லது அவரது பரிந்துரையின் பேரிலேயே நடைபெற்றதா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என கே.அசுதுல்லா தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடர்பான சில நடவடிக்கைகளையும் அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட நபர்களின் செயல்பாடுகள் மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர் ஓய்வூதியத்தில் நடைமுறைச் சிக்கல்!

இதனிடையே, பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுவதிலும் பல ஆண்டுகளாக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பத்திரிகையாளராக பணியாற்றியதற்கான ஆதாரமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடிதம் கேட்கப்படுவதாகவும், பல பெரிய ஊடக நிறுவனங்கள் முன்னாள் பணியாளர்களுக்கு இதுபோன்ற தனிப்பட்ட பணிச்சான்று அல்லது நிறுவனக் கடிதங்களை வழங்காத சூழ்நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், நீண்டகாலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றியிருந்தும் தேவையான நிறுவனக் கடிதம் கிடைக்காத காரணத்தால் சிலர் ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, நிறுவனத்தின் கடிதத்தை மட்டுமே கட்டாய ஆதாரமாகக் கருதாமல், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் PF பதிவுகள், பத்திரிகையாளர் அடையாள அட்டை, சம்பளப் பதிவுகள், வங்கிக் கணக்கு மூலம் பெறப்பட்ட சம்பள விவரங்கள் மற்றும் பணியாற்றிய காலத்தை நிரூபிக்கும் பிற அரசு அல்லது நிறுவனப் பதிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நீண்டகாலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, ஆவண நடைமுறைகளின் காரணமாக ஓய்வூதிய உரிமை மறுக்கப்படாத வகையில் அரசு உரிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல் செய்தி அடிப்படையில் செயலாற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கி அரசு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு மற்றும் நலவாரிய நியமனங்கள், பத்திரிகையாளர் ஓய்வூதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றி, தகுதியும் அனுபவமும் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என IFWJ தேசியச் செயலாளர் கே. அசுதுல்லா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.