பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு! 2 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஆவண எழுத்தர்கள் – காட்பாடியில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு! 2 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஆவண எழுத்தர்கள் – காட்பாடியில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

செய்தி: கு. அசோக்,

தமிழக பத்திரப்பதிவுத் துறையின் முக்கிய சேவைகளைத் தனியார் இணைய சேவை மையங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலூர் மாவட்டம் முழுவதும் ஆவண எழுத்தர்கள் மற்றும் கணினி தட்டச்சுப் பணியாளர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் நடைமுறையில் உள்ள 3.0 வருகை இல்லா பதிவேடு மற்றும் ஆவணம் இல்லா பதிவேடு உள்ளிட்ட சேவைகளை டெண்டர் முறையில் தனியார் இணைய சேவை மையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பத்திரப்பதிவுத் துறையின் சேவைகள் தனியார் வசம் செல்லும் அபாயம் இருப்பதாக ஆவண எழுத்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் முன்பு ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள், எழுத்தர் உதவியாளர்கள், கணினி தட்டச்சுப் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் ஆவணங்கள் எழுதுதல், இணையதளப் பதிவேற்றம் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகம் தொடர்பான பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு அரசின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளைப் பெறுவதில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அரசின் சேவைகளை நவீனமயமாக்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்காக பல ஆண்டுகளாக இத்துறையை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வரும் ஆவண எழுத்தர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.