வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்ற எதிர்ப்பு! வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் – அரசுக்கு கடும் கண்டனம்!
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூரில் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை குறைத்து, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் நீதிமன்றம் என்ற அடிப்படையில் மாற்றியமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேலூரில் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றம் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பாலச்சந்திரன், பார்த்திபன், பாஸ்கர், சுதாகர் வெற்றி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், வழக்கறிஞர் முகமது சகி, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு, வேலூரில் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், நுகர்வோர் நீதிமன்றங்கள் பொதுமக்கள் எளிதாக அணுகி தங்களது குறைகளுக்கு சட்டரீதியான தீர்வு பெறுவதற்காக உருவாக்கப்பட்டவை.
கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து, பொதுமக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.
மேலும், எந்தவித முன் அறிவிப்புமின்றி வேலூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரிக்கு நீதிமன்றத்தை மாற்றுவது பொதுமக்களுக்கும், வழக்காடிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
“மக்களைத் தேடி அரசு நிர்வாகம் செல்ல வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு காலத்தில் மக்களின் நலனுக்காக நடமாடும் நீதிமன்றங்கள்கூட செயல்பட்டன. அப்படியிருக்க, பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தை ஏன் கிருஷ்ணகிரிக்கு மாற்ற வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தை மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வழக்குகள் குறைந்துவிட்டால் நீதிமன்றத்தை மூடிவிடுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“தீ விபத்து ஏற்படவில்லை என்பதற்காக தீயணைப்பு நிலையத்தை மூடிவிட முடியுமா? அதுபோலத்தான் நுகர்வோர் நீதிமன்றங்களும். பொதுமக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீதி கிடைப்பதற்கான அமைப்பாக அவை தொடர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
வேலூரில் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்றும் முடிவை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, வேலூரிலேயே நுகர்வோர் நீதிமன்றம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

admin
