ஒரு கோடியே இருபத்து மூன்று லட்சம் ரூபாய் ஆன்லைனில் மோசடி!

ஒரு கோடியே இருபத்து மூன்று லட்சம் ரூபாய் ஆன்லைனில் மோசடி!

க.பாலகுரு,

ஆன்லைனில் அதிக லாபம் ஈட்டலாம் என கூறி ஒரு கோடியே இருபத்து மூன்று லட்சம் பெற்று ஏமாற்றிய 4 நபர்கள் கைது.

   திருவாருர் தாலுக்கா காவல் சரகம், தன்டலை அருகே தியானபுரம் கிராமத்தில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவரின் மனைவி கமலா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குடும்பத்துடன் அதே ஊரில் வசிக்கும் ரெங்கநாதன் மற்றும் அவரது மனைவி மீனாம்பாள், மகன்கள் ஆர். ஹரிகரசுதன், ஆர். ராம்ஜி ஆகியோர் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

 இந்நிலையில் ரெங்கநாதன் குடும்பத்தினர் ஆன்லைன் முலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அடிக்கடி சொல்லி கமலா குடும்பத்தினரை நம்ப வைத்து 2020-ம் ஆண்டு முதல் ஆர். ஹரிகரசுதன், ஆர். ராம்ஜி ஆகியோர் ரொக்கமாகவும், வங்கி முலமும் பல முறை பணம் பெற்று சென்றுள்ளனர்.

  மேலும் கமலா குடும்பத்தினரை நம்ப வைப்பதற்காக அவரின் மகள் நிஷாந்தி என்பவரின் வங்கி கணக்கில் அவ்வப்போது மணி டிரான்ஸ்பர் செய்து நம்ப வைத்துள்ளார்கள். இந்த நம்பிக்கையில் கமலாவின் சொத்துக்களை விற்றும், அடகு வைத்தும் அதிகமான தொகையினை 2023-ம் வருடம் வரை ரொக்கமாக சுமார் ஒரு கோடியே இருபத்து மூன்று லட்சம் பெற்றுக்கொண்டு பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.  

   இந்நிலையில் கமலா குடும்பத்தினர் எங்களிடம் பெற்ற பணத்திற்கு கணக்கு பார்த்து ஒரு கடன் பத்திரம் எழுதி கொடுங்கள் என கேட்டதற்கு கடந்த 20.03.2024-ந் தேதி ஆர்.ராம்ஜி கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டும், அதில் ராம்ஜியின் தாய் மற்றும் தந்தை இருவரும் சாட்சி கையொப்பம் செய்து கொடுத்துள்ளனர்.

  மேலும் பணத்தை பெற்ற ரெங்கநாதன் குடும்பத்தினர் எவரும் ஆன்லைன் முதலீடு செய்ய அரசு உரிமம் எதுவும் பெறவில்லை என்றும், இவர்கள் போலியாக நம்ப வைத்து ஏமாற்றி திருவாருர் மற்றும் சென்னையில் மாடி வீடுகள் மற்றும் ரொக்கமாக முதலீடு செய்து வைத்திருப்பதாகவும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 இந்நிலையில் ராம்ஜி, 2) ஹரிகரசுதன், 3) ரெங்கநாதன், ஆகியோரை விசாரணை செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் இவர்கள் வேறு யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

 இந்நிலையில், ஆன்லைனில் முதலீடு செய்வதாக பணம் பெறுதல், அதிக வட்டி தருவதாக ஆன்லைனில் பணம் அனுப்புதல், குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக வங்கி கணக்குகளை பெறுபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்கள்.