கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்! சட்டசபையில் புதிய மதுவிலக்கு சட்டம் தாக்கல்!

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்! சட்டசபையில் புதிய மதுவிலக்கு சட்டம் தாக்கல்!

ம.பா.கெஜராஜ்,

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் ரூ.10 லட்சம் வரை அபராதம் எனவும், ஆயுள் தண்டனை வழங்கும் வகையிலும் புதிய மசோதா சட்டபேரவையில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் மசோதாவை அமைச்சர்  முத்துசாமி தாக்கல் செய்தார்.

  கள்ளக்குறிச்சி நகரில் கள்ளச்சாராயம் குடித்து 64 மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதாவை தாக்கல் செய்யப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை அளித்தார்.

 மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.

கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய - உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன்.

சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.

அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது.

இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்.

எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்? "சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசாரணை கேட்டீர்களே" என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான்.

 சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

  விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.

  அதைப்போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இக்குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, குற்றவாளிகளின் 18 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

  கள்ளச்சாராயத்தை போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன்.

   மது, போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது.

போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.