கலெக்டரை அழைத்து வந்தால் தான் மார்ஷீட் தருவேன்! ஆதரவற்ற மாணவியிடம் அடாவடியாக நடந்துக் கொண்ட தலைமை ஆசிரியர்!

  கலெக்டரை அழைத்து வந்தால் தான்  மார்ஷீட் தருவேன்! ஆதரவற்ற மாணவியிடம் அடாவடியாக நடந்துக் கொண்ட தலைமை ஆசிரியர்!

த.நெல்சன்,

 வேலூர் மாவட்டம் காரணாம்பட்டு கிராமத்தில் அரசு மேனிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏழை குடும்பத்து பிள்ளைகள் பயிலும் இந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் ஆதரவற்ற பிள்ளைகளை பராமரிக்கும் இல்லம் உள்ளது.

  இந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பல பிள்ளைகள் மேற்படி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், ப்ளஸ் டூ தேர்வுக்கு பின்னர் ஆதரவற்ற பிள்ளைகளை இல்லத்தினர் வெளியேற்றிவிட்டனர். அந்த வகையில் பல பிள்ளைகள் உறவினர் வீடுகளுக்கும், தெரிந்தவர்கள் கிராமத்துக்கும் சென்றுவிட்டனர்.

 அப்படியிருக்க பள்ளிக்கு வந்து டிசி பெற்று செல்லுமாறு மாணவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலிக்கு அருகில் பாட்டியின் குடிசையில் தங்கியிருந்த ஒரு மாணவிக்கு தெரிந்தவர்கள் மூலம் தகவல் தெரிக்கப்பட்டது.

 உடனே பஸ் கட்டணத்தை ரெடி செய்து கொண்டு அந்த சிறுமி காரணம் பட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கூட புத்தகத்தை திருப்பி கொடுத்தால்தான் உனக்கு டிசி கொடுப்பேன் என்று மாணவியை வெளியேற்றிவிட்டார். (பள்ளிக்கு சொந்தமான புத்தகத்தை அனைத்து மாணவிகளுக்கும் வாசிக்க கொடுக்கப்பட்டது).

 அதற்கு அந்த மாணவி சார் மார்க் ஷீட் வாங்கும் போது அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன். மீண்டும் ஊருக்கு போய் வர பஸ்கட்டணம் இல்லை என்று தேம்பி அழுதிருக்கிறார்.

 அதைப் பார்த்த அங்கு வந்த பல பெற்றோர் அந்த தலைமை ஆசிரியரிடம் நாங்கள் பொறுப்பு சார் டிசி கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பின்னர் ஒருவழியாக மாலை வரை காத்திருக்க வைத்துவிட்டு, வாய்க்கு வந்தபடி திட்டிய பின்னரே அந்த மாணவிக்கு டிசி கொடுத்திருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர்.

 அதன் பின்னர் ரிசல்ட் வந்ததும், மார்க் ஷீட் வாங்கி செல்ல தகவல் கொடுக்கப்பட்டது. அதை நம்பி சென்ற மேற்படி சிறுமியை தலைமை ஆசிரியர் குலசேகரன், ஏன்டி போனதடவை எல்லாரும் உனக்கு சப்போர்ட் செய்து டிசி வாங்கி கொடுத்தாங்க. அனாதை நாயே நீ எல்லாம் படித்து என்னடி கிழிக்கபோகிறாய். உனக்கு மார்க் ஷீட் கொடுக்க முடியாது போடி வெளியே என்று மிரட்டியிருக்கிறார்.

 அந்த அநியாயத்தை பார்த்த செய்தியாளர் ஒருவர் இந்த விஷயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஒ) பார்வைக்கு கொண்டு சென்றார்.

 உடனே அவர் தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தலைமை ஆசிரியர் அன்றைய தினம் யாருக்குமே மார்க் ஷீட் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

  பின்னர் மீண்டும் பள்ளிக்கு வரச்சொல்லி தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். அந்த மாணவியை பார்த்ததுமே ஆத்திரம் அடைந்த அந்த தலைமை ஆசிரியர் போன தடவை சிஇஓ விடம் முறையிட்டாய். இப்போ போய் கலெக்டரை அழைத்து வா??! அப்போதுதான் உனக்கு மார்க் ஷீட் கொடுப்பேன் என்று சவுண்டு விட்டிருக்கிறார்.

  அந்த ஆதரவற்ற அந்த பெண் கண்ணீர் விட்டு கெஞ்சியும் மனமிறங்காத அந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவியை காக்கவைத்துள்ளார்.

  பின்னர் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அந்த தலைமை ஆசிரியரிடம் எடுத்துரைத்து பின்னர் அந்த மாணவிக்கு மார்க் ஷீட் வாங்கி கொடுத்துள்ளனர்.

   ஆதரவற்ற அந்த பெண்ணுக்கு மத்தியம் சாப்பாடு கூட அங்கிருந்தவர்கள் தான் வாங்கி கொடுத்துள்ளார்கள்.

 இதனையெல்லாம் சுட்டிக்காட்டி அந்த ஆதரவற்ற பெண் கல்வித்துறை, கலெக்டர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க உள்ளார்.

 அரசாங்கத்திடம்  கட்டு கட்டாக சம்பளம் பெற்று வரும் அந்த தலைமை ஆசிரியருக்கு அடுத்தவர் கஷ்டம் எங்கே புரியப்போகிறது. அதை புரியவைக்கவே பாதிக்கப்பட்ட அந்த ஏழை மாணவி முயல்கிறார் போலும்.