பல்டி பாமா என ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! “வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல” – பெ.சண்முகம் அறிக்கை

பல்டி பாமா என ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! “வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல” – பெ.சண்முகம் அறிக்கை

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள், அவர் வகித்த மற்றும் தற்போது வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உருவக்கேலி செய்வது யாராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தாராபுரம் தொகுதி வேட்பாளர் குறித்து தெரிவித்த கருத்துகள் வன்மையான கண்டனத்துக்குரியவை என்றும், அவர் வகித்த மற்றும் தற்போது வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயலாக இல்லை என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை 'பெட்டி பாமா', 'பல்டி பாமா' என்று ஸ்டாலின் விமர்சித்ததுடன், அவரது தோற்றம் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சு உருவக்கேலி செய்வதாகக் குற்றம்சாட்டி, தவெக மாநில வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் போட்டியில், பெண் வேட்பாளர் குறித்த கருத்துகள் தொடர்பாக எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, பல்வேறு கட்சித் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் மூலம் மேலும் கவனம் பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கங்கள் வெளியானால் அவையும் பிரசுரிக்கப்படும்.