தொகுதி மறுவரையறை மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் தோல்வி!

தொகுதி மறுவரையறை மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் தோல்வி!

நரேஷ்.என்,

 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை என்கிற நிலையில் மசோதா வெற்றிபெறவில்லை.

 அதாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.

இன்றைய விவாதத்தின்போது, நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

   ராகுல் காந்தி பேசும்போது, "மத்திய அரசு கொண்டுவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. மாறாக, தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி" என்று சாடினார்.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், அவசர கதியில் நிறைவேற்றினால் அது கூட்டாட்சியின் கட்டமைப்பைக் சிதைத்துவிடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

   "மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள்.

  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?" என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.

   ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பலர் தங்கள் கேள்விகளையும் வாதங்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசினர்.

  இந்த விவாதம் நேற்று இரவு சுமார் 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து இன்று காலை மீண்டும் விவாதம் தொடங்கியது.

   இன்றைய விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜிவ் ரஞ்சன் சிங், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், ஷிரோமணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், திமுக எம்பி ராஜா, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜக எம்பி ஹேமமாலினி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

 எம்பிக்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

 உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர். இறுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக நீண்ட விளக்கத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

 இந்தச் சூழலில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தோவ்வியைடைந்தன.