அமைச்சர் வருகைக்காக அரசு மருத்துவமனையில் வெள்ளையடிப்பு நாடகம்! ஆம்புலன்ஸ் நிறுத்தக்கூட இடமில்லை; அமைச்சரின் வாகனங்களால் நோயாளிகள் அவதி – வேலூரில் பரபரப்பு!
செய்தி: ஜி. குலசேகரன்
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வருகை தந்ததையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணிகளும் தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சரின் வருகைக்காக மட்டுமே மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் கேட்டறிந்தார்.
அவரது வருகைக்கு முன்னதாக மருத்துவமனையின் சுற்றுச்சுவர்களுக்கு வெள்ளையடித்தும், வளாகத்தைச் சுத்தம் செய்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவமனையில் நாள்தோறும் இதே அளவிலான பராமரிப்பு இருந்தால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரூ.3.94 கோடியில் புதிய சிடி ஸ்கேன் மையம் திறப்பு!
இதனைத் தொடர்ந்து, வேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.3.94 கோடி மதிப்பிலான புதிய சிடி ஸ்கேன் இயந்திர மையத்தை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார். மேலும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா, சுதாகர், சிந்து, தென்றல் குமார், வேலழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.pp

நிகழ்ச்சியின்போது குழந்தைகள் வார்டில் அமைச்சர் தங்க மோதிரம் வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் அதிக எண்ணிக்கையில் வார்டுக்குள் சென்றதால் குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவானதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸுக்கு வழியில்லை; அதிகாரிகளின் வாகனங்களால் நெரிசல்!
அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அமைச்சரின் வாகனங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள், மாவட்ட ஆட்சியரின் வாகனம், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அரசு மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி சிரமப்பட்டனர்.
நோயாளிகளும் உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது.
நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனையின் நுழைவுவாயிலிலேயே ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வருகையின்போது வெள்ளையடித்து மருத்துவமனையை அழகுபடுத்துவதைக் காட்டிலும், தினமும் மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதும், ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்லவும் நிறுத்தவும் உரிய வசதிகளை உறுதி செய்வதுமே நோயாளிகளுக்கு அவசியமானது.

admin
