காவல் நிலையத்திலேயே மனைவியுடன் கணபதி ஹோமம் நடத்திய இன்ஸ்பெக்டர்!சிறுமி மாயம் முதல் அழுகிய சடலம், எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு வரை அடுத்தடுத்து கிரைம் வழக்குகள்!

காவல் நிலையத்திலேயே மனைவியுடன் கணபதி ஹோமம் நடத்திய இன்ஸ்பெக்டர்!சிறுமி மாயம் முதல் அழுகிய சடலம், எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு வரை அடுத்தடுத்து கிரைம் வழக்குகள்!

செய்தி: எம். முருகன்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தனது மனைவியுடன் இணைந்து கணபதி ஹோமம் நடத்திய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறுமி மாயமான சம்பவம், அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது, எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது என அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்ச்சியாக கிரைம் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில், காவல் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்த காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு ஏற்பாடு செய்தார். 

இதில் அவரது மனைவியும் பங்கேற்றுள்ளார்.

பொதுவாக கோவில்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் கணபதி ஹோமம், காவல் நிலைய வளாகத்திலேயே நடத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

குற்றச் சம்பவங்களைத் தடுப்பதும், குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதுமே காவல்துறையின் முதன்மைப் பொறுப்பு என்ற நிலையில், காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஹோமம் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த ஹோமம் நடப்பதற்காக அதற்கு முன் தினமும் ஹோமம் நடந்த தினமும் காவல் நிலையத்தில் எந்தப் பணியையும் செய்யவில்லை. அதேபோல் எந்த புகாரையும் பெறவில்லை இது நியாயமா என்று கேள்வி எழுகிறது.