ப்ளக்ஸ் பேனர்களின் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் வேலூர் மக்கள்! மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
கு.அசோக்,
கடந்த ஒரு வாரமாக வேலூர் வாசிகளும், வேலூருக்கு வந்து செல்லும் வாகனங்களும் சொல்லொண்ணா சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ப்ளக்ஸ் பேனர்களின் ஆக்கிரமிப்பே அதற்கு காரணம்.
ப்ளக்ஸ் பேனர்களை வைப்பதற்கு ஏகப்பட்ட விதிமுறைகளை நீதிமன்றமும் அரசும் விதித்திருக்கும் நிலையில், அதையெல்லாம் மதிக்காமல் பேனர் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதான சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
கடந்த ஒருவார காலமாகவே, தெற்கு, மகளிர், வடக்கு மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையங்களின் வாயிற்படிகளிலேயே தெரிகின்ற மாதிரி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தும் ஏனோ தெரியவில்லை எவரும் கண்டுக் கொள்ளவில்லை.
மேலும் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அனைத்துக் கட்சி பேனர்களும் மெகா சைசில் ஒட்டப்பட்டுள்ளன.

பாலாற்று பாலத்தின் தடுப்பு சுவர்களையும் விடவில்லை இவர்கள். இருபுறமும் கொடியை கட்டி மகிழ்ந்து கொண்டனர்.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி, புதுக்கட்சி, லெட்டர் பேடு கட்சி என எந்தவித பேதமின்றி வைக்கப்பட்ட இந்த பேனர்களுக்காக பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி அண்ணாசாலையில் நடுவில் உள்ள குறுக்கு சுவருக்கு மீது சீரியல் செட் வேறு போட்டுக் கொண்டு மின்சாரத்தை கொள்ளையடித்தனர்.
ஒரு பேனருக்குக் கூட அனுமதி பெறப்படாமல், கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவற்றை நிறுவியதால் பொது மக்கள் ரொம்பவே சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
குறிப்பாக ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே நம்ம அதிகாரி சார்கள் வேலூர் போக்குவரத்தை குழப்பி வைத்திருக்கும் நிலையில் போதாக்குறைக்கு பேனர்களின் ஆக்கிரமிப்பும் அதில் பங்கேற்றது.
இந்நிலையில் திமுக கொடி அகற்றும் பொழுது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிர் இழந்துள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பானாவரம் கூட்ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர்களை வரவேற்பதற்காக வழி எங்கிலும் கொடி மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை திருமண விழா நிறைவடைந்ததை அடுத்து, திமுக கொடி பறக்கவிட்ட கம்பங்களை அகற்றும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டனர்.ஸ்
அப்போது கூலி தொழிலாளி குமார் என்பவர் அங்கிருந்த செம்மலே என்கிற பேனர் அருகில் உள்ள கொடியை அகற்றும் இப்பொழுது எதிர்பாராத விதமாக கொடி அருகில் உள்ள மின் உயர்மீது சாய்ந்துள்ளது.

அப்பொழுது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இவர்கள் வைத்த பேனர்களால், ஏற்கனவே ஆக்கிரமிப்புகளினால் சுருங்கி கிடக்கும் வேலூர் சாலைகள் மீண்டும் சுருங்கி விட்டது.
எந்த கட்சிக்காரரும் பேனர் ஆர்டர் கொடுத்தாலும் அதை நட்டுவைக்க பல ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்கள் தான் சாலையை தோண்டுவதும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் உத்தரவுகளை மீறுவதாகவும் உள்ளனர். ஏனவே அவர்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சுளுக்கெடுத்தால் நலம்.

admin
