போலி முகாம்கள் வாயிலாக எஸ்.சி.எஸ்.டி.யினர் நிதியை சுருட்டிய பெண் எஸ்.எஸ்.ஐ! ஆட்சியர் பெயரையும் தவறாக பயன்படுத்தியுள்ளார்?

போலி முகாம்கள் வாயிலாக எஸ்.சி.எஸ்.டி.யினர் நிதியை சுருட்டிய பெண் எஸ்.எஸ்.ஐ! ஆட்சியர் பெயரையும் தவறாக பயன்படுத்தியுள்ளார்?

ம.பா.கெஜராஜ்,

 போலி முகாம்கள் வாயிலாக எஸ்.சி.எஸ்.டி.யினர் நிதியை சுருட்டிய பெண் எஸ்.எஸ்.ஐ ஒருவர் மீது வெறும் பணியிடமாற்ற நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.   

 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 எஸ்.சி - எஸ்.டி. வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக பெற்று கொடுப்பது, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, பொதுமக்களுக்கு சமூக நீதி சம்பந்தமான விழிப்புணர்வு நடத்துவது போன்றவை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் பணிகளாகும்.

  அந்த வகையில், சிறிய அளவில் விழிப்புணர்வு நடத்துவதற்கு சாமியான பந்தல், சேர், டீ காபி ஆகியவற்றை ஏற்பாடுகள் செய்வதற்கு அரசால் ஒரு கூட்டத்துக்கு 2500/ ரூபாய் வரையிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு அரசாங்கத்தால் 64,000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

 ஆனால் இந்த மாதிரி கூட்டங்களை இப்பிரிவினர் நடத்துவதே இல்லையாம். ஆனால் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம் என போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு பரிந்துரை செய்து லட்சக்கணக்கில் பணத்தை அமுக்கியிருக்கிறார்கள்.

  அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களில் 300 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக ( 300*2500=7,50,000) அரசாங்கத்தை ஏமாற்றி பணம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பெரிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக (6*64000=384000) தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இதில் குறிப்பிடத்தக்க ஒன்று விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாமலேயே கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டு போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு அனுப்பி அதற்கான தொகையையும் பெற்றுக் கையாடல் செய்துள்ளனர்.

 இதை மேற்படி கவிதா தான் முன்னின்று செய்தார் என்றும், மேலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இத்தனை புகார்கள் வந்த பிறகும் கூட தொடர்ந்து கவிதா அதே இடத்திலேயே பணி புரிந்து வந்துள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு சில அதிகாரிகளின் சப்போர்ட் இருந்ததாம்.

 இந்நிலையில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் நடந்த ஊழல் விஷயம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கர்க் ஐ.பி.எஸ். அவர்களின் கவனத்திற்கு சென்றதன் அடிப்படையில் கவிதா பனியிடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

  அந்த வகையில் அவர் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றார். ஆனாலும் அவர் அங்கு போய் பணியில் சேருவதற்கு முன் வேலூரிலேயே மீண்டும் பணியாற்ற இயலுமா என்று முயற்சிகளை மேற்கொண்டாராம்.

  ஆகவே  அவர்மீது விசாரணை நடத்தி உரிய பனிஷ்மென்ட் வழங்கவேன்டும் என வடக்கு மண்டல ஐஜிக்கு புகா£கள் பறப்பதாக தகவல்.

 இதுகுறித்து எஸ்.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த 20 ஆண்டுகள் அவர் இங்கேயே பணியாற்றியது உண்மைதான். அதற்காக ஆண்டுக்கு 100 கூட்டங்கள் நடத்தியதாகவும் அதில் ஊழல் செய்ததாக சொல்வது எல்லாம் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் குறிப்பிடும் தொகை அதிகம். காரணம், அவ்வளவு தொகை எல்லாம் அந்த பிரிவுக்கு காவல்துறையில் வழங்குவது இல்லை. அப்படி நடந்திருந்தாலும் அதில் சம்மந்தப்பட்ட பிரிவின் உயர் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கும் என்கிறார்கள்.

  கவிதாவை போல பலர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் விங் எனப்படும் யூனிபார்ம் அணியாத பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டு காலத்தை கழித்து வருகிறார்கள்.

 இது போன்றவர்கள் எந்த பந்தோபஸ்த்துக்கும் செல்லாமல் நீண்ட நாட்களாக இப்படி கஷ்டபடாமல் சம்பளம் வாங்கிகொண்டிருக்கிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து சுழற்சி முறையில் பணியமர்த்தி மேற்படி பிரிவுகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்கிறார்கள்.

 அப்படிப்பட்ட நடைமுறை வந்தால் அரசு ஒதுக்கும் நிதியும், பரிகாரங்களும் உரியவர்களுக்கு சென்றடையும். அரசின் திட்டமும் முழுமையடையும்.

  மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எஸ்.எஸ்.ஐ கவிதாவிடம் விளக்கம் கேட்க முயன்றுள்ளோம், அவர் தரப்பு விளக்கம் கிடைத்தால் அதை பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.