கனிமொழியை பேருந்தில் அமரவைத்த பெண் ஓட்டுநர் டிஸ்மிஸ்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
நேற்றிரவு கோவை சென்ற கனிமொழி, பெண் ஓட்டுநரான ஷர்மிளா விடுத்திருந்த அழைப்பை ஏற்று இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்றார். அப்போது பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பினும் பேருந்தின் பெண்கள் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்த கனிமொழி அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஷர்மிலாவுடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.
ஷர்மிளா, வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
ஏற்கனவே ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.