ரேஷன் கடைகளில் மானிய விலை வெங்காயம் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றம்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
திருச்சி மாநகரில் ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே வெங்காயம் முழுவதும் விற்றுத் தீர்ந்ததால் தொடர்ந்து வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 வரை உயர்ந்திருந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு நகர்ப்புற ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கியது.
திருச்சி மாநகரில் அதிக எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகள் உள்ள 100 ரேஷன் கடைகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 10 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டது.
விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வெங்காயம் முழுவதும் விற்பனையாகிவிட்டது. அதன் பின்னர் ஒரு வாரமாக புதியதாக வெங்காயம் வழங்கப்படாததால், மானிய விலையில் வெங்காயம் வாங்க எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வெங்காயத்தை தொடர்ந்து வழங்குவதுடன், வெளிச்சந்தை விலை கிலோ ரூ.35-க்கு கீழ் வரும் வரை மானிய விற்பனையை தொடர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில், முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 10 டன் வெங்காயமும் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக வெங்காயம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin
