ரேஷன் அரிசி முறைகேட்டில் ரூ.22.20 கோடி மோசடி! அரிசி ஆலை உரிமையாளர், மனைவி, மகன் கைது – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரிடம் போலீஸ் விசாரணை!

ரேஷன் அரிசி முறைகேட்டில் ரூ.22.20 கோடி மோசடி! அரிசி ஆலை உரிமையாளர், மனைவி, மகன் கைது – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரிடம் போலீஸ் விசாரணை!

செய்தி: வை.கதிரவன்,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசியை முறைகேடாகக் கையாடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், அரிசி ஆலை உரிமையாளர், அவரது மனைவி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.22 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 916 இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய 3,710 மெட்ரிக் டன் நெல்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (57) என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது.

இந்த அரிசி ஆலை கடந்த 2022 அக்டோபர் 27ஆம் தேதி முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரிசி அரைக்கும் முகவராகச் செயல்பட்டு வந்துள்ளது.

இதன் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு முதல் அந்த ஆலைக்கு சுமார் 3,710 மெட்ரிக் டன் நெல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, 15 நாட்களுக்குள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு ஒப்படைக்கப்படும் அரிசி, அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியதாகும்.

அதிகாரிகள் ஆய்வில் அம்பலமான முறைகேடு!

கடந்த செப்டம்பர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அரசால் வழங்கப்பட்ட நெல்லுக்கு இணையான அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்படாததும், அரிசி ஆலையின் இருப்பிலும் இல்லாததும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆலை உரிமையாளர் சண்முகம், அவரது மனைவி வனிதா (47), மகன் ரெங்கராஜன் (26) ஆகியோர் அரசு வழங்கிய நெல் மற்றும் அரிசியை முறைகேடாகக் கையாடியது தெரியவந்தது. 

இதனால்,பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய அரிசியைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ.22.20 கோடி இழப்பு; மூவர் கைது!

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல்துறையினர் நவம்பர் 14ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 316(2), 316(5), 318(4) பிரிவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 7ஆம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சண்முகம், அவரது மனைவி வனிதா, மகன் ரெங்கராஜன் ஆகிய மூவரையும் நவம்பர் 15ஆம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களிலேயே இத்தகைய முறைகேடு நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு ரூ.22 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.