குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் பிளாஸ்டிக்! மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை!

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் பிளாஸ்டிக்!  மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை!

செய்தி: ஜி.குலசேகரன்,

வேலூர் மாங்காய் மண்டி அருகே குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சி அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாங்காய் மண்டி அருகே ராகவேந்திரா திரையரங்கம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில், குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை குடோனில் பதுக்கி வைத்திருந்தவர்கள் யார், தொடர்ந்து இங்கிருந்து அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததா என்பது குறித்து மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேலூரில் ஒரே இடத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.