ஆம்பூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்தி: கு. அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் உள்ள புதுமனை பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் செல்போன் டவர் அமைக்கப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகில் டவர் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தங்களது நோக்கம் அல்ல என்றும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பால் போதிய இடைவெளியில் டவர் அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நரியம்பட்டு அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில பேரவைத் தலைவர் அர்ஜுனன், மண்டல துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலை

இதேபோல், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள BSNL செல்போன் டவர் அருகே இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பதும், கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்த நிலையில், BSNL டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin
