நாட்றம்பள்ளி பகுதியில் பல இடங்களில் பணம் வைத்து மங்காத்தா சூதாட்டம்! கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் – காவல்துறை கண்காணிப்பு உள்ளதா?
செய்தி: செ. கவி பிரியன்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட சுண்ணாம்புக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வைத்து மங்காத்தா சூதாட்டம் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் பல இளைஞர்களும் குடும்பத் தலைவர்களும் கடனில் சிக்கி, குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் – ஆசியா அமைப்பின் நிர்வாகிகள், இப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது குறித்து காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன் பின்னணியில், சூதாட்டத்தைத் தடுக்க வேண்டிய காவல்துறையின் கண்காணிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
கடனில் சிக்கும் குடும்பங்கள் – வீடுகளையும் இழக்கும் அவலமா?
சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் சிலர், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், கடன் கொடுத்தவர்களிடம் தங்களது வீடுகளை எழுதி வழங்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புகார்கள் உண்மையா, எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, சொத்துகள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.
சூதாட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
சுண்ணாம்புக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வைத்து மங்காத்தா சூதாட்டம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், இதனை ஏற்பாடு செய்பவர்கள் யார், பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன,
இதன் மூலம் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், சூதாட்டம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்பவர்களிடம் பணம் வசூலிப்பது, புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தலையீடு செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் மீது புகார் – மாவட்ட எஸ்.பி. கவனிப்பாரா?
சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் – ஆசியா அமைப்பின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ஆர். விமல்ராஜ், சூதாட்டத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நபர்கள் மீதும், கடமையில் தவறியதாக ஆதாரங்கள் மூலம் தெரியவரும் காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் பணத்தையும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோதச் சூதாட்டம் நடைபெறுகிறதா என்பதைத் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரடியாகக் கண்காணித்து, புகார்களின் உண்மைத்தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
