அவரு.... தாத்தா இல்லை என்கிற ஆடியோ வழக்கு:- நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அவரு.... தாத்தா இல்லை என்கிற ஆடியோ வழக்கு:- நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம், "அவரு தாத்தா இல்லை" என்று கல்லூரி மாணவியிடம் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதை அவ்வளவு எளிதாக  மறந்திருக்க முடியாது. 

பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது.

அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வந்த இந்த வழக்கின் மீதான தீர்ப்பின் விவரம் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவண பாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியரான இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது. 

2018 மே மாதம் அவரு தாத்தா இல்லை என்பதை உள்ளிட்ட ஆடியோ பரவியது.

 இதில் உயர்பதவியில் இருந்தவரின் பெயர் அடிபட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

ஆனால் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற வாரம் இருமுறை இதழ், அந்த உயர் பதவியில் இருந்தவருக்கும் இந்த சர்ச்சைக்கும் என்ன தொடர்பு என்று ஆதாரங்களுடன் செய்தி வெளிய்யிட்டது.

ஆகவே அதன் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் சீனியர் ஜெர்னலிஸ்ட் இந்து திரு.ராம் உள்ளிட்டோர் நேரடியாக ஆதரவு தெரிவித்து சட்டபடி கைதை தவிர்த்தனர்.

இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

 பின்னர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர்.

ஆகவே அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரை கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். 

மேலும் நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

 மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். 

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிமன்றத்தில் 1,160 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் 2018 ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்தனர்.

  மேலும் இந்த வழக்கில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகாததால், தீர்ப்பு 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, நீதிமன்றத்தில் நிர்மலா

தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஏப்ரல் 29 ஆஜராகினர்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். முருகன், கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

 ஆகவே நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் நிர்மலா தேவி ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2.42 லட்சம் அபராதம் விதித்தும் பரபரப்பான தீர்ப்பை நீதிபதி பாப்பாத்தியம்மாள் வழங்கினார்.

மேலும் அபராத தொகையை நிர்மலாதேவி செலுத்த தவறினால், கூடுதலாக ஆறாண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

முன்னதாக தலைமை நீதிபதியிடம் தொலைபேசி மூலமாக  நீதிபதி பாப்பாத்தி அம்மாள் தீர்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தீர்ப்புக்குப் பின்னர் நிர்மலா தேவி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.