சின்னகவுண்டனூர் என்ற ஊர்பெயரை மாற்ற அரசாணை!மக்கள் கொதிப்பு!

ஜி.கே.சேகரன்,
ஜோலார்பேட்டை அருகே சின்னகவுண்டனூர் என்ற ஊர்பெயரை மாற்ற வேண்டும் என அரசாணை வந்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூர் என்ற ஊர் உள்ளது. இந்த நிலையில் கவுண்டனூர் என்ற பெயரை மாற்றம் செய்து ஊர் பெயரை மாற்ற வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் நந்தினிக்கு அரசாணை வந்துள்ளது.
இந்த தகவலை பஞ்சாயத்து தலைவர் நந்தினி சின்னா கவுண்டனூர் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் அரசால் வழங்கப்பட்ட, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு ,வாக்காளர் அடையாளஅட்டை, பான்கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் சின்னாகவுண்டனூர் என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
எனவே ஊர் பெயரை மாற்றம் செய்தால் நாங்கள் வாங்கி வைத்துள்ள அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றக்கூடிய சூழல் உண்டாகும் எனவே தங்களின் ஊர்பெயரை மாற்ற வேண்டாம் என கூறி ரெட்டியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள், உங்களின் ஒப்புதல் இல்லாமல் ஊர்பெயரை மாற்றம் செய்யமாட்டோம் மேலும் இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
அதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் திருப்பத்தூர் வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.