அப்பாவை காணோம்”... மேடையில் மாவட்டச் செயலாளர் செய்த ‘டெமோ’!

அப்பாவை காணோம்”... மேடையில் மாவட்டச் செயலாளர் செய்த ‘டெமோ’!

செய்தி: கு. அசோக்,

தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து வேலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் நந்தகுமார் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறை சென்றதை கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி முதல்வர் விஜய்க்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு, கொலைச் சம்பவங்கள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்டச் செயலாளர் ஒருவர் பேசிய வார்த்தைகள்தான் அங்கு இருந்த உடன்பிறப்புகளின் கவனத்தை ஈர்த்தது.

மு.க.ஸ்டாலின் தொடர்பாக பேசும்போது, “அப்பாவை காணோம்...” என்ற விஜய்யின் பேச்சை நினைவுபடுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் ஒருவர் அதனை செயலில் செய்து காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த உடன்பிறப்புகள், “நம்ம மாவட்டச் செயலாளரே நம்ம முன்னாடியே இப்படி செய்து காட்டுகிறாரே...” என்று உற்சாகம் இழந்ததாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால், மாவட்டச் செயலாளர் சொல்ல வந்தது வேறு எனவும் கூறப்படுகிறது. “அப்பாவை காணோம்” என்று கூறப்பட்டாலும், அவர் விரைவில் உள்ளே வருவார் என்ற கருத்தை தெரிவிக்கவே அவர் முற்பட்டதாகவும் தெரிகிறது.

பேச்சின் முழு நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், உடன்பிறப்புகள் மத்தியில் ஏற்பட்ட இந்த குழப்பம் ஆர்ப்பாட்டத்தைவிட அங்கு பேசுபொருளாக மாறியது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஞானசேகரன், கார்த்திகேயன், நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.